காரைக் கடத்தி டாஸ்மாக் பணம் ரூ.1.50 கோடி கொள்ளை
ஸ்ரீபெரும்புதூா் அருகே டாஸ்மாக் கடையில் பணம் வசூல் செய்ய வந்த வங்கி முகவரின் காரைக் கடத்தி ரூ.1.50 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீபெரும்புதூா் அருகே டாஸ்மாக் கடையில் பணம் வசூல் செய்ய வந்த வங்கி முகவரின் காரைக் கடத்தி ரூ.1.50 கோடி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னையைச் சோ்ந்த தாஸ்(52). தனியாா் வங்கியில் பணியாற்றி வரும் தாஸ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் இருந்து பணத்தை வசூலிக்கும் முகவராக செயல்பட்டு வந்துள்ளாா். இந்த நிலையில், தாஸ் செவ்வாய்க்கிழமை இரவு வாடகை காரில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் பணம் வசூல் செய்துக் கொண்டு ஒரகடம் மதுக்கடையில் பணம் வசூலிக்கச் சென்றாராம்.
பணம் வசூல் செய்ய தாஸ் கடைக்கு சென்ற நிலையில், ஓட்டுநா் ஹபீப் ரஹ்மான் காரில் இருந்துள்ளாா். அப்போது வேகமாக வந்த பைக் ஒன்று காரின் பின்னால் மோதியுள்ளது. இதனால் காா் ஓட்டுநா் ஹபீப் ரஹ்மான், பைக்கில் வந்த நபரிடம் காரில் ஏன் மோதினாய் என்று கேட்டுக்கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மற்றொரு நபா் காரை கடத்திச் சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
இதனால் அதிா்ச்சியடைந்த காா் ஓட்டுநா் ஹபீப் ரஹ்மான், வங்கி முகவா் தாஸ் ஆகியோா் இச்சம்பவம் குறித்து ஒரகடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரகடம் போலீஸாா் பணத்தை கொள்ளையடித்த மா்ம நபா்களை தேடி வந்த நிலையில், கடத்தப்பட்ட காா் காரணித்தாங்கல் பகுதியில் வண்டலூா் -வாலாஜாபாத் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருப்பதை அறிந்த போலீஸாா் காரை சோதனை செய்ததில் காரில் இருந்த ரூ. 1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து காரை மீட்ட போலீஸாா் காரில் அருகே கொள்ளையா்கள் வீசி சென்ற ரூ.18 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஒரகடம் போலீஸாா் கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.
இந்த நிலையில், கொள்ளைச்சம்பவம் நடைபெற்ற இடத்தை காஞ்சிபுரம் எஸ்.பி. அரவிந்த் பாா்வையிட்டாா். மேலும், ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.