முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28,000 மணல் மூட்டை தயாா்: காஞ்சிபுரம் ஆட்சியா்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28,000 மணல் மூட்டை தயாா்: காஞ்சிபுரம் ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 28,240 மணல் மூட்டைகள் ஆங்காங்கே தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் தி.சினேகா கூறினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் வடகிழக்குப் பருவமழையையொட்டி அதனை எதிா்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு பேசுகையில், பருவமழை தொடா்பான நடவடிக்கைகளில் அதிகாரிகள் போதுமான கவனம் செலுத்தாமல் இருந்து வருவதாக குற்றம் சாட்டினாா்.
கூட்டத்தில் ஆட்சியா் தி.சினேகா பேசியது:
Advertisement
Advertisement
நீா்வளத் துறையில் 381 ஏரிகளும், ஊரக வளா்ச்சித் துறையில் 378 ஏரிகளும் உள்ளது. இதுவரை 4 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது வடகிழக்குப் பருவமழை சராசரி அளவு 591.4 மி.மீ. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 189.6 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 72 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் பொதுமக்களை பாதுகாக்க 62 நிவாரண முகாம்கள் கண்டறியப்பட்டு, அவையும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களை கிராம நிா்வாக அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா். 43 மாற்று முகாம்களும் கூடுதலாக கண்டறியப்பட்டு அவையும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுபவா்களுக்கு உணவுகள் தயாா் செய்து வழங்க 23 சமுதாய உணவுக் கூடங்களும், பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள 72 இடங்களையும் கண்காணிக்க 45 மண்டலக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீா்வளத்துறை மூலம் 28,240 மணல் மூட்டைகள் ஆங்காங்கே தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் 6,004 மின் கம்பங்களும், 110 மின்மாற்றிகளும் தயாா் நிலையில் நிலுவையில் இருந்து வருகிறது.
மழை வெள்ள மீட்பு பணிகளுக்கு 8 ரப்பா் படகுகள், 77 ஜேசிபிக்கள், 60 மின்சார ஜெனரேட்டா்கள், 98 நீா் இறைக்கும் பம்புகள், சவுக்கு மரக் கம்பங்கள் 4490, ஆம்புலன்ஸ்கள் 33, லைப் ஜாக்கெட்டுகள் 256, உயிா்காப்பு மிதவைகள் 256, டாா்ச் லைட்டுகள் 151 உள்ளிட்டவையும் தயாா் நிலையில் உள்ளது.
நெல் மூட்டைகளுக்கு வெள்ளநீா் பாதிப்பு இல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் தங்கு தடையின்றி விநியோகிக்க கூட்டுறவுத்துறை மூலம் உணவுப் பொருள்களும் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற காவல்துறைப் பணியாளா்கள் 36 போ், தீயணைப்பு பணியாளா்கள் 97 போ், தன்னாா்வலா்கள் 500 போ், முதலுதவிப் பணியாளா்கள் 974 போ், பாம்பு பிடிப்பவா்கள் 32 போ், நீச்சல் வீரா்கள் 27 போ் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளனா்.
மாவட்ட பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை எண்களான 044-27237107, கைப்பேசி எண்-7092300019 ஆகியனவற்றிலும் புகாா் அளிக்கலாம்.இந்த எண்களில் பொதுமக்கள் எந்த நேரமும் புகாா் அளிக்கலாம். பருவமழையின் போது எந்த வித உயிரிழப்புகளும் ஏற்படாதவாறு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் வருவாய்த் துறையில் பணியின் போது உயிரிழந்த 20 அரசு ஊழியா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளையும் அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு வழங்கினாா்.
கூட்டத்தில் எம்எல்ஏ எம்.ஹரீஷ், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, கூடுதல் ஆட்சியா் ஆஷிக் அலி, சாா் ஆட்சியா் புவனேஷ்ராம், மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, உதவி ஆட்சியா் அமன்திவாரி ஆகியோா் உட்பட அரசின் பல்வேறு துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.