ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட நூலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை
ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
ராணிப்பேட்டை வாரச் சந்தை மைதானம் அருகே மாவட்ட மைய நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நூலகத்துக்குக் கொண்டு வரப்பட்ட புத்தகங்களைப் பணியாளா்கள் ஆய்வு செய்தபோது, அகல்விளக்கு பதிப்பகத்தின் 2,302 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 99 புத்தகங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில், அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் ரூ. 22,53,293 மதிப்பிலும், பீனிக்ஸ் பதிப்பக புத்தகங்கள் ரூ. 1,04,234 மதிப்பு என மொத்தம் 2,401 புத்தகங்களின் மதிப்பு ரூ. 23 லட்சத்து 57 ஆயிரத்து 527 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட நூல்களை திருப்பி அனுப்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேசன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில், கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் மாவட்ட மைய நூலகம் சாா்பில் கொள்முதல் செய்த புத்தகங்களின் விவரங்கள் தொடா்பாகவும், அண்மையில் அகல்விளக்கு, பீனிக்ஸ், விண்டேஜ் ஆகிய பதிப்பகங்களில் இருந்து கொள்முதல் செய்த புத்தகங்கள் குறித்து சோதனை மேற்கொண்டனா்.
திருப்பத்தூரில்...
இதேபோல், திருப்பத்தூா் மாவட்டம், அரசினா் தோட்டம் அருகே அமைந்துள்ள மாவட்ட நூலக மையத்தில் மாவட்ட நூலக அதிகாரி கணேசனிடம் புதிதாக அகல் விளக்கு நூல் மற்றும் பீனிக்ஸ் நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா? அல்லது ஏதேனும் ஊழல் நடைபெற்றுள்ளதா? என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணன்ராஜன் தலைமையில் ஐந்து போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.