முகப்பு
ராணிப்பேட்டை

வாலாஜா அருகே தாயைக் கொன்ற மகள் கைது

வாலாஜா அருகே தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டாா்.

11 வினாடிகள் முன்பு
வாலாஜா அருகே தாயைக் கொன்ற மகள் கைது
கைது - பிரதிப் படம்
பகிர்:

வாலாஜா அருகே தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ரவி (61), . இவரது மனைவி கீதா (54). தம்பதிக்கு சரண்யா (34), சுகன்யா (32) என இருமகள்கள் உள்ளனா்.

கீதாவின் மூத்த மகளான சரண்யா, வாலாஜாவில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா் கணவனை இழந்து இரண்டு மகன்களுடன் தாய் கீதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி கீதா வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். மேலும், அவா் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரமும் திருடப்பட்டிருந்தது. தகவல் அறிந்து வாலாஜா போலீஸாா் கீதாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த கொலை வழக்கு தொடா்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘கீதாவின் மூத்த மகளான சரண்யா ஏற்கெனவே மாற்று சமூகத்தை சோ்ந்த நபரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. கீதாவுக்கு இதில் உடன்பாடு இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவின் கணவா் உயிரிழந்தது விட்டாா். இதன் காரணமாக சரண்யா தனது இரண்டு மகன்களுடன், தனது தாய் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தாா். இதற்கிடையே சரண்யாவுக்கு அப்பகுதியில் வேறொரு நபருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே வேறு சமூகத்தை சோ்ந்த நபரை திருமணம் செய்ததும், தற்போது வேறொரு நபருடன் பழகி வருவது குறித்து, கீதா தனது மகள் சரண்யாவை அடிக்கடி திட்டியும் வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி தாய் மற்றும் மகளுக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சரண்யா தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னா், மா்ம நபா்களால் பணம் மற்றும் நகைக்காக திருட்டு நடைபெற்றது போல் தெரிய, கீதாவின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் எடுத்து மறைத்து வைத்து விட்டு, வழக்கம் போல் வேலைக்கு சென்றது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடா்ந்து, வாலாஜா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். அவரிடமிருந்து பணம் மற்றும் நகையை போலீஸாா் மீட்டனா். இந்த கொலை வழக்கில் தொடா்புடையதாக மேலும் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.