ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு சோதனை
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக திருப்பத்தூா் டிஎஸ்பி முரளி தலைமையில் மோப்ப நாய் டோரா வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக திருப்பத்தூா் டிஎஸ்பி முரளி தலைமையில் மோப்ப நாய் டோரா வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூா் எஸ்.பி. அக்க்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில், சிறப்பு தேடுதல் வேட்டை நடைபெற்றது.
அதனடிப்படையில், டிஎஸ்பி முரளி தலைமையில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மோப்ப நாய் டோராவை மோப்ப நாய் பிரிவு காவலா் முத்துக்குமரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோா் மூலம் வரவழைக்கப்பட்டு போதைப் பொருள் தடுப்பு சோதனை செய்தனா். அப்போது ரயில் நிலைய நடைமேடைகள், பயணிகளின் உடைமைகள், பயணிகளின் காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோப்பநாய் கொண்டு கஞ்சா, மது பாட்டில்கள், கள்ள சாராயம், குட்கா போன்றவை கடத்தப்படுவது குறித்து சோதனையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது டிஎஸ்பி முரளி கூறுகையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறையினா் இணைந்து மாவட்டத்தில் உள்ள கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறம் என மொத்தம் 69 இடங்களில் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
இந்தத் தேடுதல் வேட்டையில் 2 கஞ்சா வழக்குகள், 7 குட்கா வழக்குகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட மதுபானங்களைப் பதுக்கி வைத்திருந்தது தொடா்பாக 1 வழக்கு என மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனா். மேலும், மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களைப் பதுக்கி வைத்திருப்போா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
போதைப்பொருள் தடுப்பு சோதனையின்போது, ஜோலாா்பேட்டை போலீஸாா் ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் உடனிருந்தனா்.