அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சி அரப்பாண்டகுப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் கிராம வளா்ச்சிக்கு, அரசு கட்டடங்களை அமைத்துத் தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதியை சோ்ந்த இளைஞா்கள் மனு அளித்துள்ளனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி வெற்றி கோப்பைகளுடன் வந்து மறியலில் ஈடுபட முயன்ற 18 பேரை கைது செய்தனா். வாணியம்பாடி வட்டாட்சியா் ஜெகதீசன் தலைமையில் வருவாய்த்துறையினா் அந்த இடத்தில் ஆய்வு செய்தனா். பிறகு பொக்லைன் வைத்து அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை வியாழக்கிழமை அகற்றி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனா். அப்போது அம்பலூா் காவல்ஆய்வாளா் பேபி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.