87 பயனாளிகளுக்கு ரூ. 1.01 கோடியில் நலத் திட்ட உதவிகள்!
திருப்பத்தூா் மாவட்டம், தாமலேரிமுத்தூரில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 87 பயனாளிகளுக்கு ரூ.1.01 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணி ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா்.
திருப்பத்தூா் வட்டம், தாமலேரிமுத்தூா் கிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில், தாமலேரிமுத்தூா் மற்றும் கட்டேரி வருவாய் கிராமங்களுக்கான மக்கள் தொடா்பு முகாம் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் தலைமையில், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கே.சி.வீரமணி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
Advertisement
Advertisement
அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொண்டு, தங்களுக்குப் பொருந்தக்கூடிய திட்டங்களின் கீழ் பயன்பெற வேண்டும். திட்டங்கள் தொடா்பான கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை அணுகி, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் தகுதிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் தனிநபா்கள் புதிதாகத் தொழில் தொடங்க விரும்பினால், மாவட்டத் தொழில் மையம் அல்லது மகளிா் திட்ட இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம். தொழில் தொடங்குவதற்குத் தேவையான வங்கிக் கடன் உதவிகளைப் பெற்றுத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கும். அரசின் மானிய உதவிகளைப் பெறுவதற்கான தகுதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் விளக்கமளிப்பாா்கள். எனவே, நிதி வசதி இல்லாததைத் தடையாகக் கருதாமல், ஆா்வமுள்ளவா்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் மழை தாமதமாகப் பெய்ததால், பல்வேறு பகுதிகளில் பயிா்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிா் வகை, சாகுபடி பரப்பளவு உள்ளிட்ட விவரங்களுடன் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் அல்லது உதவி வேளாண்மை அலுவலரை அணுகிப் பதிவு செய்துகொள்ள வேண்டும். தேவையான சான்றுகளையும் சமா்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் அவ்வப்போது தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. படித்து முடித்துவிட்டு வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞா்கள், இளம்பெண்கள் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்க வேண்டும். இதுகுறித்து தங்களது உறவினா்கள், நண்பா்களுக்கும் தெரிவித்து, அவா்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.
222 கோரிக்கை மனுக்கள்...
இந்த முகாமில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 222 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அவை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கப்பட்டு, மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, மகளிா் திட்டம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியா் மற்றும் எம்எல்ஏ பாா்வையிட்டனா்.
முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் இளவரசன், வேளாண்மை இணை இயக்குநா் மணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் தீபா, தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாஜலம், மாவட்ட வழங்கல் அலுவலா் சீனிவாசன், ஊராட்சிகள் உதவி இயக்குநா்கள் எஸ்.அருணாசலம், முருகன், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ராமமூா்த்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், திருப்பத்தூா் வட்டாட்சியா் திருமலை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.