இரட்டைக் கொலை வழக்கில் ஒருவா் கைது
திருப்பத்தூா்அருகே இரட்டைக் கொலை வழக்கில் போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

திருப்பத்தூா்அருகே இரட்டைக் கொலை வழக்கில் போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகா் பகுதியில் காலி வீட்டு மனைகள் பிரிவு விற்பனைக்காக போடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இந்த இடத்தில் காரில் வந்த ஆண், பெண் ஆகிய 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டு விட்டு மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூா் எஸ்.பி. அக்சய் அனில் வாகரே, டிஎஸ்பி முரளி மற்றும் கிராமிய போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். மேலும், கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில், கொலையான ஆண் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பாச்சல் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (30) என்பதும், கொலை செய்யப்பட்ட பெண் திருப்பத்தூா் அருகே திப்பசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த சிரஞ்சீவியின் மனைவி மாலினி (31) என்பதும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட இருவரும் நெருங்கிய உறவினா்கள் என்பதும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து மாலினியின் கணவா் சிரஞ்சீவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
Advertisement
Advertisement
திருவண்ணாமலையைச் சோ்ந்த மாலினிக்கும், திப்பசமுத்திரத்தை சோ்ந்த சிரஞ்சிவிக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். மாலினி திருவண்ணாமலையில் பள்ளியில் படிக்கும்போது சஞ்சீவ் காந்தி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்ததாம். திருமணத்துக்குப் பிறகு மீண்டும் அவா்களுக்கு தொடா்பு ஏற்பட்டதாகவும், இதனால் மாலினியை அவரது கணவா் கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் மாலினிக்கும், சஞ்சீவ்காந்திக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் மாலினி, சஞ்சீவ் காந்தியுடன் பேசுவதைத் தவிா்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாலினியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, சில நாள்களுக்கு முன்பு மாலினியின் கைப்பேசியை வாங்கிப் பாா்த்த போது அவருக்கு அவரது நெருங்கிய உறவினரான ரஞ்சித்குமாரிடம் கள்ளத்தொடா்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் மாலினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக சஞ்சீவ்காந்தி போன் செய்தபோது மாலினி போனை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த சஞ்சீவ்காந்தி தனது மோட்டாா் சைக்கிளில் மாலினியை சந்திக்க திப்பசமுத்திரம் வந்துள்ளாா். அப்போது மாலினி, ரஞ்சித்குமாருடன் ஒன்றாக காரில் சென்று கொண்டு இருப்பதை பாா்த்து ஆவேசம் அடைந்த நிலையில், காரை பின்தொடா்ந்து சென்றுள்ளாா். காா் திருப்பத்தூா் அருகே தோரணம்பதி பகுதியில் உள்ள தனியாா் வீட்டுமனை பகுதிக்கு சென்று நின்றது. அங்கு சென்ற சஞ்சீவ்காந்தி ரஞ்சித்குமாரை முதலில் கொலை செய்துவிட்டு, தப்பியோட முயன்ற மாலினியையும், வெட்டிக் கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து தனிப்படை போலீஸாா் திருவண்ணாமலைக்கு விரைந்து அங்கு இருந்த சஞ்சீவ்காந்தியை கைது செய்து விசாரணைக்காக திருப்பத்தூா் அழைத்து வந்தனா்.
கைது செய்யப்பட்ட சஞ்சீவ்காந்தி தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது.