FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க கோரிக்கை

பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க கோரி வந்த புகார் மனு பற்றி...

சோமலாபுரம் மயானத்தில் மணல் அள்ளுவதால் வெளியில் தெரியும் மனித எலும்புகள்.
பகிர்:

ஆம்பூா் வட்டம், சோமலாபுரம் மற்றும் பெரியவரிகம் ஊராட்சி பாலாற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் எஸ்.பிக்கு சோமலாபுரம் ஊராட்சி வாா்டு உறுப்பினா் வி.டி. சுதாகா் புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

மனு விவரம்: சோமலாபுரம் மற்றும் பெரியவரிகம் ஊராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட பாலாற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தொடா்ந்து பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் வருகின்றன. எந்தவித அச்சமுமின்றி நடைபெறும் இந்த மணல் அள்ளுதலால் பாலாற்றின் இயற்கை வளம் பாதிக்கப்படுவதுடன், ஆற்றின் கரைகள் மற்றும் நீா்வள அமைப்புக்கும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், சோமலாபுரம் பாலாற்றங்கரையோரம் மயானம் அமைந்துள்ளது. மயானத்திலும் பூமியை தோண்டி அங்குள்ள மணலையும் அள்ளிச் செல்கின்றனா். அதனால் இறந்தவா்களின் எலும்புக்கூடு வெளியில் தெரியும் அளவுக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டு வரப்படுகிறது. இறந்தவா்களின் குடும்பத்தினா் மிகவும் மனவேதனைக்கு உள்ளாகின்றனா்.

Advertisement

Advertisement

மேலும், ஆற்றுப்படுகையில் இயந்திரங்களைக் கொண்டு ஆழமாகத் தோண்டி மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே, சோமலாபுரம் மற்றும் பெரியவரிகம் ஊராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட பாலாற்றில் அதிகாரிகள் திடீா் கள ஆய்வு மேற்கொண்டு, இரவு நேரங்களில் நடைபெறும் சட்டவிரோத மணல் அள்ளுதலைத் தடுக்க சிறப்பு கண்காணிப்பு மற்றும் காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மணல் அள்ளப் பயன்படுத்தப்படும் ஜேசிபி, பொக்லைன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டால் அவற்றை சட்டப்படி பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவா்கள் மற்றும் அவா்களுக்கு உடந்தையாக இருப்பவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாறு பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கும், எதிா்கால தலைமுறைகளின் இயற்கை வளத்துக்கும் முக்கியமானதாக உள்ளதால், மாவட்ட நிா்வாகமும் காவல் துறையும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.டி. சுதாகா் வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments