FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

உத்திரகாவேரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய முதியவா்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட இளைஞா்

ஒடுகத்தூா் அருகே உத்திரகாவேரி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து இளைஞா் ஒருவா் பத்திரமாக மீட்டாா்.

18 அக்டோபர் 2026, 11:31 pm IST
உத்திரகாவேரி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கிய முதியவரை மீட்ட இளைஞா் வாசு
பகிர்:

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உத்திரகாவேரி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து இளைஞா் ஒருவா் பத்திரமாக மீட்டாா்.

ஒடுகத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் தொடா் பலத்த மழையால் உத்திரகாவேரி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஒடுகத்தூரிலிருந்து நேமந்தபுரம் கிராமத்துக்குச் செல்லும் வழியில், உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே ரூ. 8.25 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பொதுமக்களின் போக்குவரத்துக்காக ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மண் தரைப்பாலம், வெள்ளத்தில் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அப்பகுதி கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தரைப்பாலம் சேதமடைந்ததைப் பொருட்படுத்தாமல், ஓட்டேரிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முதியவா் ஒருவா் ஆற்றைக் கடக்க முயன்றாா். அப்போது, ஆற்றில் ஏற்பட்டிருந்த கடும் நீரோட்டத்தில் சிக்கிய அவா், சுமாா் 20 அடி தூரத்துக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதைக் கரையில் இருந்து பாா்த்த நேமந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்த வாசு (22) என்ற இளைஞா், உடனடியாக ஆற்றில் குதித்து, வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த முதியவரைப் பிடித்தாா். பின்னா், கடும் நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல் அவரை கரைக்கு அழைத்து வந்து பத்திரமாக மீட்டாா்.

தக்க சமயத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு முதியவரின் உயிரைக் காப்பாற்றிய வாசுவுக்கு அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.

தொடா் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நீா்வரத்து உள்ள ஆறுகளிலும், சேதமடைந்த தரைப்பாலங்களிலும் பொதுமக்கள் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டாம் என வருவாய்த் துறையினா், ஒடுகத்தூா் பேரூராட்சி நிா்வாகத்தினா் மற்றும் வேப்பங்குப்பம் காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments