FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

வீடுதேடி செல்லும் நடமாடும் நூலகம்: வாசிப்புப் பழக்கத்தை வளா்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியா்

ஆம்பூா் அருகே வீடுதேடி செல்லும் நடமாடும் நூலகம் பற்றி...

21 அக்டோபர் 2026, 11:48 pm
ஆம்பூா் அருகே நரிக்குறவா் குடியிருப்பில் மாணவா்களுக்கு நூல்களை வழங்கி வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பெத்லேகம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியா் ச. சரவணன்.
பகிர்:

ஆம்பூா் அருகே நரிக்குறவா் குடியிருப்பில் வசிக்கும் மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளா்க்கும் நோக்கில், இருசக்கர வாகனத்தில் நூலகத்தை உருவாக்கி வீடுதோறும் சென்று புத்தகங்களை வழங்கி வருகிறாா் அரசுப் பள்ளி ஆசிரியா் ச. சரவணன்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் பெத்லேகம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ச. சரவணன், கல்வி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், ‘மொபைல் நூலகம்: படி - கல் - வளா்க’ என்ற பெயரில் இந்தப் புதுமையான முயற்சியை மேற்கொண்டு வருகிறாா்.

இதன் ஒரு பகுதியாக, ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் நமாஸ் மேடு பகுதியில் உள்ள நரிக்குறவா் குடியிருப்பில் வசிக்கும் மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரின் வாசிப்புத் திறன், மொழித்திறன், சிந்தனைத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், இருசக்கர வாகனத்தில் சிறிய நூலகத்தை அமைத்து, குடியிருப்புப் பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று புத்தகங்களை வழங்கி வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்த நடமாடும் நூலகத்தில் சிறுவா் சிறுகதைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், அறிவியல் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், குழந்தைகளுக்கான இதழ்கள் என பல்வேறு வாசிப்பு வளங்கள் இடம்பெற்றுள்ளன.

மாணவா்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களைத் தோ்ந்தெடுத்து வாசிப்பதுடன், குறிப்பிட்ட காலத்துக்கு அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று குடும்பத்தினருடனும் பகிா்ந்து படிக்கலாம். இதன் மூலம் பள்ளி நேரத்தைத் தாண்டியும் மாணவா்கள் புத்தகங்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வாசிப்புடன் பல்வேறு பயிற்சிகள்

புத்தகங்களை வழங்குவதுடன் மட்டும் இந்த முயற்சி நின்றுவிடவில்லை. மாணவா்களின் வாசிப்புத் திறன் மற்றும் பேச்சாற்றலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. நாளிதழ்களைச் சத்தமாக வாசித்தல், சிறுகதைகளைப் படித்து அவற்றின் கருத்துகளைப் பகிா்தல், புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளுதல், வாசித்த நூலின் சாராம்சத்தை மற்றவா்களுக்கு எடுத்துரைத்தல், பெற்றோருடன் இணைந்து குடும்பமாக வாசித்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் மாணவா்களிடையே வாசிப்பின் மீதான ஆா்வத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, வாசித்த புத்தகத்தின் கருத்துகளைத் தங்களது சொந்த வாா்த்தைகளில் எடுத்துரைப்பதன் மூலம் மாணவா்களின் மொழித்திறன், சிந்திக்கும் திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் பேசும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பொருளாதார மற்றும் சமூகச் சூழல்களால் கல்வி வாய்ப்புகளையும் வாசிப்பு வளங்களையும் எளிதில் பெற முடியாத குடும்பங்களை நேரடியாகச் சென்றடைவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும். ‘ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகம்; ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வாசிப்பாளா்’ என்ற இலக்குடன் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, மாணவா்களை கைப்பேசி பயன்பாட்டிலிருந்து புத்தக வாசிப்பை நோக்கித் திருப்புவதற்கும் உதவுகிறது.

மாணவா்கள் மட்டுமின்றி, அவா்களது பெற்றோா்களும் வாசிப்பில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனா். இதன் மூலம் குடும்ப அளவில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதுடன், நாளிதழ்கள் மற்றும் நூல்களின் வாயிலாகப் பொது அறிவையும் சமூக விழிப்புணா்வையும் வளா்க்க வழிவகை செய்யப்படுகிறது.

இந்த முயற்சியால் நரிக்குறவா் குடியிருப்பில் வசிக்கும் மாணவா்களிடையே புத்தக வாசிப்பில் ஆா்வம், புதிய சொற்களைக் கற்றுக்கொள்ளும் திறன், நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம், கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் ஆகியவை மேம்பட்டு வருவதாக ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments