ஆரணி ஆற்றில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
பொன்னேரியில் உள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என 5 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரியில் உள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என 5 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகரை ஓட்டி ஆரணி ஆறு செல்கிறது. இங்குள்ள ஆரணி ஆற்றின் அக்கரையில் குன்னமஞ்சேரி, ஏலியம்பேடு, வைரவங்குப்பம், புதுவாயல் உள்ளிட்ட 5 கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும், பொன்னேரி வந்துதான் செல்ல வேண்டும். அதே போன்று இங்குள்ள மாணவர்களும் ஆற்றைக் கடந்துதான் பள்ளி, கல்லூரிக்குச் சென்று வரவேண்டும். ஆற்றில் மழை நீர் இல்லாத நாள்களில் இவர்கள் எளிதாக ஆற்றைக் கடந்து சென்று வந்து விடுவர்.
ஆனால் மழை நீர் இருக்கும் நாள்களில் இவர்கள் பெரியகாவனம் வழியாக (ரயில்வே கேட்டைக் கடந்து) 3 கி.மீ. தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. அல்லது படகு மூலம் ஆற்றைக் கடந்து சென்று வரவேண்டும். இதனால் ஆற்றின் அக்கரையில் உள்ள மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
பாலம் அமைக்கக் கோரிக்கை.....: குன்னமஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக இங்கு மேம்பாலம் ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் இங்கு மேம்பாலம் அமைக்க அரசு ரூ.12.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதனை தொடர்ந்து பொன்னேரி-பழவேற்காடு சாலை, புதுவாயல்-பழவேற்காடு சாலையை இணைக்கும் வகையில் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 200 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் மற்றும் 300 மீட்டர் அணுகுச் சாலையுடன் கூடிய மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள், 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த பாலப் பணிகள்
2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முடிவடைந்திருக்க வேண்டும். இருந்தும் பாலம் அமைக்கும் பணிகளின் போது, ஆற்றில் மழை நீர் செல்வது, மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால், குறித்த காலத்திற்குள் பாலத்தினை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பாலம் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையிலும், பாலத்தின் இரண்டு புறமும் அணுகுச் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக மேற்கண்ட 5 கிராமங்களில் வசிக்கும் மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி, பாலம் மற்றும் அணுகுச் சாலைகளை விரைந்து முடித்து, அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.