சமூக விரோதிகளின் கூடாரமாகும் பழைய ஆட்சியர் அலுவலகம்?
திருவள்ளூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பயன்பாடின்றி இருப்பதால் கதவு, ஜன்னல்கள் போன்றவை திருடு போவதுடன் இக்கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதனை
திருவள்ளூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பயன்பாடின்றி இருப்பதால் கதவு, ஜன்னல்கள் போன்றவை திருடு போவதுடன் இக்கட்டடம் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதனை சீரமைத்து பிற அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 1997-இல் திருவள்ளூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. அப்போது, திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலையில் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. பின்னர், 2001-ஆம் ஆண்டில் திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையில் புதிதாக ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதால், பழைய ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.
சமூக விரோதச் செயல்: இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளாக பழைய ஆட்சியர் அலுவலக வளாகம் பராமரிப்பின்றி பூட்டியே இருக்கிறது. இந்த அலுவலக வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பலர், மது அருந்தும் கூடாரமாக இதைப் பயன்படுத்துகின்றனர். சமூக விரோதிகள், கட்டடத்தின் கதவு, ஜன்னல்கள் மற்றும் மின்சாதனப் பொருள்களையும் திருடிச் செல்கின்றனர். இரவு நேரங்களில் விபசாரம் போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அவதி: இதுபோன்ற செயல்களால் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் 3 ஆயிரம் பேர் இவ்வழியாக நடமாட முடியாத நிலையில் உள்ளனர். அதிலும், சாலையில் மதுப்புட்டிகளை உடைத்த துண்டுகள் கிடப்பதால் நடக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் தகவல் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இக்கட்டடத்தை புதுப்பித்து அலுவலகப் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
புதுப்பிக்கக் கோரிக்கை: இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்த மாவட்டம் தொடங்கி 21 ஆண்டுகள் ஆன நிலையில், பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை, அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குடிநீர் வடிகால் வாரியம், கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதனால் மாதந்தோறும் வாடகை என்ற பேரில் அரசுப் பணம் விரயமாகி வருகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் இந்த அலுவலகத்தைப் புதுப்பித்து பிற அரசு அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கு ஆட்சியர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.