பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் அமைக்கப்பட்டும்
திருவள்ளூர் பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் அமைக்கப்பட்டும், பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கும் நூலகங்களைத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆகியோர் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மாநில அளவில் கடந்த 2008-2009இல் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் தலா ரூ.3.20 லட்சம் மதிப்பில் நூலகம் அமைக்கப்பட்டது.
அந்த நூலகங்களில் நாள்தோறும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் நாளிதழ்கள், அறிவியல் மற்றும் வரலாற்று நூல்கள், நாவல், சிறுகதை, தமிழ் இலக்கியங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவுப் புத்தகங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆய்வு நூல்கள் போன்றவை இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.
திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் 600 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வருகின்றனர். இங்கு 2008-2009இல், ரூ.3.20 லட்சம் செலவில் நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகம் 2 ஆண்டுகள் செயல்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நூலகம் பூட்டியே இருக்கிறது.
மேலும், இந்த நூலகக் கட்டடம் பராமரிக்கப்படாததால் அங்குள்ள நூல்கள் செல்லரித்துப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்திற்கொண்டு நூலகப் படிப்பு முடித்தவர்களை நூலகர்களாக நியமனம் செய்து நூலகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பட்டதாரி வாசகர் வசந்தகுமார் கூறியது:
இக்கிராமம் அகழ்வாராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த கிராமமாகத் திகழ்கிறது. ஆனால், இங்குள்ள நூலகம் செயல்படாத நிலையில் உள்ளது. எத்தகைய முரண்பாடு இது. இந்த நூலகத்தில் அனைத்து நாளிதழ்கள் மற்றும் வாரப் பத்திரிகைகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மேலும், நூலகக் கட்டடமும் சேதமடைந்த நிலையில் உள்ளது. நூலகத்திற்குள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. பராமரிப்பு இல்லாத காரணத்தால் இவை செல்லரித்துப் போகும் நிலை உருவாகும் என மாணவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, நூலகத்தைத் திறந்து வாசகர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், இந்த மாவட்டத்தில் உள்ள ஆயலூர், பட்டரை பெரும்புதூர், புன்னப்பாக்கம், ஓதிக்காடு, செவ்வாப்பேட்டை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் செயல்படாமல் கிடக்கும் நூலகங்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.