முகப்பு
திருவள்ளூர்

அம்பத்தூரில் அரசு பொது மருத்துவமனை அமைக்கப்படுமா?

அம்பத்தூர் தொகுதியில் பல ஆண்டுகளாக அரசு பொது மருத்துவமனை இன்றி பொதுமக்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Updated On : 14 அக்டோபர் 2024, 3:06 am IST
அம்பத்தூரில் அரசு பொது மருத்துவமனை அமைக்கப்படுமா?
பகிர்:

ஆவடி: அம்பத்தூர் தொகுதியில் பல ஆண்டுகளாக அரசு பொது மருத்துவமனை இன்றி பொதுமக்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாடி, கொரட்டூர், ஜெ.ஜெ.நகர், பாடிகுப்பம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 1,800-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும், இங்கு 100-க்கு மேற்பட்ட ஏற்றுமதி ஆடை நிறுவனங்களும், மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அமைந்துள்ளன.

அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள தொழிற்சாலைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

Advertisement

அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வாகனப் போக்குவரத்தை நம்பி வருகின்றனர். இந்த பகுதியில் சி.டி.எச் சாலை, அம்பத்தூர் -செங்குன்றம் நெடுஞ்சாலை, அம்பத்தூர்-வானகரம் சாலை, கொல்கத்தா நெடுஞ்சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை நெடுஞ்சாலை, தாம்பரம்- புழல் புறவழிச்சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன.

மேற்கண்ட சாலைகளின் வழியாகத்தான் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இதனால் அம்பத்தூர் பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் காயம் அடைவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: கடந்த சில ஆண்டுகளில் மேற்கண்ட சாலைகளில் விபத்தில் சிக்கி சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மேலும் தொழிற்சாலைகளில் இயந்திரங்களில் சிக்கியும், மின்சாரம் பாய்ந்தும், கட்டடங்களில் வேலை செய்யும் போது கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் அரசு மருத்துவமனை இல்லை. இதனால் விபத்தில் காயமடைந்தவர்களை அவசர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஸ்டான்லி மருந்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நிலையே உள்ளது.

சென்னைக்கு சிகிச்சைக்கு செல்லும் போது சி.டி.எச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் காரணமாக பல சமயங்களில் அவசர ஊர்தி விரைவாக செல்ல முடியவில்லை. பலத்த காயம் அடைந்தவர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு செல்ல முடியாததால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க அம்பத்தூரில் படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு பொது மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. எனவே, இனி மேலாவது அம்பத்தூரில் பொதுமக்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் படுக்கை வசதிகள் கூடிய நவீன அரசு பொது மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றனர்.

அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் கூறியது: அம்பத்தூர் தொகுதியில் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக இரு முறை சட்டப்பேரவையில் பேசியுள்ளேன். அப்போது துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும் என்றார். தற்போது மருத்துவமனை அமைக்க இடம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனை கட்டப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.