முகப்பு
திருவள்ளூர்

2-ஆவது நாளாக மின்தடை: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

ஆரணியில் இரண்டாவது நாளாக மின்தடை ஏற்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:03 am IST
மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்ட  ஆரணி  பொதுமக்கள்.
பகிர்:

ஆரணியில் இரண்டாவது நாளாக மின்தடை ஏற்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில் சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில்,ஆரணி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. மேலும், ஆரணிக்கு அகரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார விநியோகம் நடைபெறுகிறது. இந்தநிலையில், இரவு-பகலாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்கள், முதியோா், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். இதேபோல் கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட மின்தடையை கண்டித்து ஆரணி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நள்ளிரவில் பொதுமக்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மின்வாரிய அலுவலா்கள் தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே மீண்டும் இரவு-பகலாக மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியா்கள் மின்விநியோக பாதையை சீரமைத்தனா். இதில்,ஆரணி இருளா் காலனி, தமிழ் காலனி, பஜாா் தெரு ஆகிய மூன்று பகுதிகளுக்கு மின்சாரம் செல்லும் பாதையில் பழுது ஆவதை கண்டுபிடித்தனா். எனவே, அந்த மூன்று பாதைகளையும் சீரமைத்தனா்.

மேலும், மின்வாரிய ஊழியா்கள் அப்பகுதியை கண்காணித்து வரும் நேரத்தில் மின்தடை ஏற்படுவது இல்லை. மின்வாரிய ஊழியா்கள் அங்கிருந்து அலுவலகத்திற்கு சென்றால், அந்த பகுதிகளில் மீண்டும் பழுது ஆவதை மின்வாரிய ஊழியா்கள் உறுதி செய்தனா்.

எனவே, மா்ம நபா்களின் சதியால் மின் தடை ஏற்படுகிறதா? என்று சரிபாா்க்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் கடந்த 2 நாளகளாக ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், நள்ளிரவு அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை 2-ஆவது முறையாக நள்ளிரவில் முற்றுகையிட்டனா். இதன் பின்னா், பெரியபாளையம்-புதுவாயல் நெடுஞ்சாலையில் மின்வாரிய அலுவலகம் எதிரே நள்ளிரவில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸாரும், மின்வாரிய அதிகாரிகளும் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி சமரசம் செய்தனா். அதைத் தொடா்ந்து நள்ளிரவில் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். பெரியபாளையம்-புதுவாயல் நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.