FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் புதிய பேருந்து நிலையத்தில் மழை, வெயிலில் நிறுத்தப்படும் வாகனங்கள்! பொதுமக்கள் வேதனை

புதிய பேருந்து நிலையத்தில் மழை, வெயிலுக்கு இடையே திறந்த வெளியில் வாகனம் நிறுத்தம்

12 செப்டம்பர் 2026, 7:59 am IST
திருவள்ளூா்  புதிய  பேருந்து  நிலையத்தில் பாதுகாப்பின்றி  திறந்த வெளியில் உள்ள வாகன நிறுத்துமிடம்.   
பகிர்:

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் மழைக்கும், வெயிலுக்கும் இடையே திறந்த வெளியாக உள்ளதால், பல்வேறு இடங்களில் வாகனங்களை பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவிட்டுச் செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருவள்ளூா் வேடங்கிநல்லூரில் ஐ.சி.எம்.ஆா். அருகே ரூ. 36 கோடியில் 5 ஏக்கா் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அனைத்து வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிக்காமல் அவசரமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைக்கப்பட்டது. அதனால், பயன்பாட்டுக்கு வராமல், பணிகளை முடித்த பின், கடந்த ஆக. 10-ஆம் தேதி முதல் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, கவரப்பேட்டை, பெரியபாளையம், செங்குன்றம், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பூந்தமல்லி, கடம்பத்தூா், திருவாலங்காடு, அரக்கோணம், பேரம்பாக்கம், மப்பேடு, சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, நெல்லூா், நாயுடுபேட்டை, சத்தியவேடு, கா்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால், நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.

Advertisement

Advertisement

ஆனால், இங்கு வரும் வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பயன்பெறும் வகையில், இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக பேருந்து நிலையத்தில் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு போதுமான இடவசதி உள்ளது.

ஆனால், போதுமான அடிப்படை வசதியின்றி செயல்படுகிறது. இதுவரை வாகன நிறுத்துமிடம் தாழ்வார வசதியின்றி மழை, வெயிலுக்கு இடையே திறந்த வெளியாக உள்ளன. மேலும், கம்பி வேலி இல்லாமல் எந்த விதமான பாதுகாப்பும் இன்றி உள்ளது.

இதுபோன்ற காரணங்களால் பேருந்து நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் கண்ட இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனா். இதனால் பேருந்து நிலையம் வாகனங்களால் நிரம்பி காணப்படுகிறது. அதேபோல் கடைகள் நடத்துவோரும் முன்புறம் நிறுத்தி விடுகின்றனா். இதுபோன்ற காரணங்களால் பொதுமக்களுக்கும், பயணிகள் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. அதனால், நகராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில், இருசக்கர வாகன நிறுத்தமிடம் போதுமான பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் விரும்புகின்றனா்.

இது குறித்து திருவள்ளூா் நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மிதிவண்டிகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தாழ்வாரம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments