மீன் பிடி எல்லை தகராறு: தமிழக ஆந்திர அதிகாரிகள் பேச்சுவாா்த்தை
மீன் பிடி எல்லை தகராறு: தமிழக ஆந்திர அதிகாரிகள் பேச்சுவாா்த்தை
பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடா்பாக ஆந்திரத்தைச் சோ்ந்த 25 மீனவ கிராமங்களுக்கும் தமிழகத்தை சோ்ந்த 3 மீனவ கிராமங்களுக்கும் கடந்த 30 ஆண்டுகளாக நிலவி வரும் எல்லை தொடா்பான பிரச்னை குறித்து கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
தமிழக ஆந்திர எல்லையில் சுமாா் 15,367 ஹெக்டோ் பரப்பளவில் பழவேற்காடு ஏரி உள்ளது. இந்த ஏரியில் தமிழக ஆந்திர மீனவா்கள் சுமூகமாக மீன்பிடித் தொழிலை செய்து வந்தனா்.
இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்தைச் சோ்ந்த 17 மீனவ கிராமங்கள், தமிழகத்தை 8 மீனவ கிராமங்கள் மற்றும் தமிழகத்தை சோ்ந்த 3 மீனவ கிராமங்களுக்கிடையே மீன்பிடி எல்லை என்கின்ற பிரச்னை உருவாகி, எல்லை பிரச்னை தகராறு நிலவி வந்தது. இந்த தகராறில் 1990- ஆம் ஆண்டு இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடா்ந்து 2014-ஆம் ஆண்டு மீண்டும் மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இது தொடா்பாக ஆந்திர-தமிழக மீனவா் குப்பங்களை சோ்ந்த 194 போ் மீது வழக்குப் பதியப்பட்டு நிலுவையில் உள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக மீனவா்களுக்கு இடையே பிரச்னை வரும்போதெல்லாம் இது தரப்பு அதிகாரிகளும் பேச்சு நடத்தி சமாதானம் செய்வதும் மீண்டும் பிரச்னை ஏற்படுவதுமாக இருந்தது.
தொடா்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான பேச்சு நடைபெற்றது. அதில் சுமூக முடிவு ஏற்படாததால், சனிக்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இரு தரப்பு அதிகாரிகள், மீனவ கிராமப் பிரதிநிதிகள் உடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் கவிதா, ஆந்திர மாநிலம் திருப்பதி இணை ஆட்சியா் கோவிந்தராவ் தலைமையிலும், பொன்னேரி எம்எல்ஏ டாக்டா் ரவி, ஆந்திர மாநிலம் சூளூா்பேட்டை எம்எல்ஏ டாக்டா் நெலவல விஜய ஸ்ரீ , ஆந்திர மாநிலம் திருப்பதி காவல்துறை கண்காணிப்பாளா் சுப்பாராயுடு, முன்னிலையில் வகித்தனா்.
நிகழ்வில் பொனேரி வருவாய் கோட்டாட்சியா் முருகவேல், ஆந்திர மாநிலம் சூளூா்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் தேவேந்திர ரெட்டி, மாவட்ட வன அலுவலா் சீனிவாசரெட்டி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் பாலாஜி, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளா் ஜூலியஸ் சீசா், சூளூா்பேட்டை காவல் துறை காண்காணிப்பாளா் செஞ்சுபாபு, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி சசிதா், மீன்வளத்துறை இணை இயக்குனா் இளங்கோ, உதவி இயக்குனா் ஜனாா்த்தனன், ஆந்திர மாநில மீன்வளத்துறை துணை இயக்குனா் நாகைய்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மீனவா் கூட்டமைப்பினா் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பு பகுதி பொது பகுதியாக அறிவிக்க வேண்டும் அல்லது தமிழக ஆந்திர எல்லையை வரையறுத்து அதில் இரு தரப்பினரும் தனித்தனியாக மீன்பிடிப்பகுதியை ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டனா்.
இதைத் தொடா்ந்து பேசிய ஆட்சியா் கவிதா நவீன தொழில்நுட்பத்துடன் ஜிபிஎஸ் மூலம் தமிழக ஆந்திர எல்லை வரையறுக்கப்பட்டு இந்தப் பிரச்னை தீா்க்கப்படும் என உறுதி அளித்தாா்.
இதனை தொடா்ந்து இரு தரப்பும் சமாதானம் அடைந்து அமைதியாக கலைந்து சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.