ஆந்திரத்தில் அடைக்கப்பட்டுள்ள கொத்தடிமைகளை மீட்கக் கோரி மனு
ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள குடும்பத்தினரை மீட்கக் கோரி, தப்பி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் இருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள குடும்பத்தினரை மீட்கக் கோரி, தப்பி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் இருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த மதுராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்தோணி (40), போஸ் (35).
இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்த சீனுவாசமங்காபுரம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் அவர்கள் இருவரது குடும்பங்களும் கொத்தடிமைகளாக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதாகவும், வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்ட செங்கல் சூளை உரிமையாளர்கள், வாரத்துக்கு ரூ. 400 மட்டுமே சாப்பாடு செலவுக்காக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கூலியை உயர்த்தித் தருமாறு கேட்டால் அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த அந்தோணி, போஸ் குடும்பத்தினர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
ஆனால், முடியாமல் போனதால் குடும்பத்தினரை அங்கேயே விட்டு விட்டு அந்தோணி, போஸ் ஆகியோர் மட்டும் திருவண்ணாமலைக்கு தப்பி வந்தனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரனைச் சந்தித்து கொடுத்த மனுவில், உயிருக்கு பயந்து நாங்கள் இருவரும் தப்பி வந்துவிட்டோம்.
அங்கேயே அடைத்து வைக்கப்பட்டுள்ள போஸ் மனைவி பெரியநாயகி, அந்தோணி மனைவி டெல்பினா மேரி, குழந்தைகள் பீட்டர், ஜான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு திருவண்ணாமலைக்கு அழைத்து வர வேண்டும்.
எங்களிடம் இருந்து பறித்து வைத்துள்ள ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளையும் மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.