கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 பேர் காயம்- 3 பேர் கைது
திருவண்ணாமலையில் முன் விரோதம் காரணமாக கார் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், அதிமுக ஊராட்சித் தலைவர் மகன் உள்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில் முன் விரோதம் காரணமாக கார் மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், அதிமுக ஊராட்சித் தலைவர் மகன் உள்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த மேல்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். அதிமுக பிரமுகரான இவர், ஊராட்சித் தலைவராகவும் உள்ளார். இவரது மகன் விஜய் (எ) விஜயராஜ் (35). திருவண்ணாமலை, பாவாஜி நகரைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் கவுதம் (34). இவர்கள் இருவரும் 3 மாதங்களுக்கு முன் சாத்தனூர் அணைக்குச் சென்றுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன் விரோதமாக மாறியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் விஜயராஜ், அவரது நண்பர்கள் வெங்கடேசன் (43), கீழ்சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளமுருகன் (43) ஆகியோர் திருவண்ணாமலை-செங்கம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு காரில் சென்று கொண்டிருந்தனர். அக்னி தீர்த்தக் குளம் எதிரே சென்றபோது காரின் பின்னால் 2 இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் கார் சேதமடைந்தது. தொடர்ந்து, காரில் இருந்த மூவரையும் கீழே இறக்கி அடித்து, உதைத்துள்ளனர். மூவரின் அலறம் சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால், மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். பின்னர், பலத்த காயமடைந்த மூவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement
தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, டிஎஸ்பி சரவணகுமார், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் இரா.அருள்பிரசாத் உள்ளிட்ட போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
மூவர் கைது: இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, திருவண்ணாமலை, பாவாஜி நகரைச் சேர்ந்த கருணாமூர்த்தி (55), திருவண்ணாமலை கல் நகரைச் சேர்ந்த தமிழ் (எ) தமிழ்செல்வன் (30), தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்த வினோத் (32) ஆகியோரைக் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள கருணாமூர்த்தியின் மகன் வழக்குரைஞர் கவுதம் (34), அவரது தம்பி ரகு (27) ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.