கருணாநிதி மறைவு: அதிர்ச்சியால் மூன்று மாவட்டங்களில்10 பேர் சாவு
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி மறைவு செய்தியைக் கேட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் 10 பேர் அதிர்ச்சியில் இறந்தனர்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி மறைவு செய்தியைக் கேட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் 10 பேர் அதிர்ச்சியில் இறந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்துள்ள ஆதமங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (48). இவர் ஆதமங்கலம் புதூர் கிளையின் 3-ஆவது வார்டு திமுக செயலராக இருந்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு கருணாநிதி மறைந்த செய்தியை பார்த்த இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாம்.
உடனடியாக உறவினர்கள் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனராம். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
இதேபோல, திருவண்ணாமலை, நாவக்கரை கிராமம், ராம்ஜி நகரைச் சேர்ந்த முனியம்மாள் (54), ஆரணி சத்யா நகரைச் சேர்ந்த நரசிம்மன் (75), ஆரணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பெருமாள் மனைவி பாப்பம்மாள் (56), செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வரதன் (74), செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் மனைவி சுசீலா (60) ஆகியோரும் திமுக தலைவர் கருணாநிதி மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்தில்...
கருணாநிதி மறைந்த செய்தியைக் கேட்டு, கடலூர் மாவட்டத்தில் திமுக பிரமுகர்கள் 2 பேர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அந்தக் கட்சியினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எழுத்தூரைச் சேர்ந்தவர் ராமசாமி (72).
செவ்வாய்க்கிழமை மாலை தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது கருணாநிதி இறந்த செய்தியைக் கேட்டதும் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே இறந்தார்.
விருத்தாசலம் அருகே உள்ள காணாதுகண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் தளபதி (65). இவரும் கருணாநிதி இறந்த செய்தி கேட்டு, மயங்கி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில்...
விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம், வள்ளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனி மகன் மோகன்(56).
மின் வாரியத்தில் மின் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் புதன்கிழமை மாலை வீட்டில் தொலைக்காட்சியில் கருணாநிதியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது, மோகனுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி பெற்று, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்
கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
திருக்கோவிலூர் சந்தப்பேட்டையைச் சேர்ந்தவர் எஸ்.குமரவேல் (60), உணவகம் நடத்தி வந்தார். திமுக தொண்டரான இவர், கருணாநிதி செவ்வாய்க்கிழமை மரணமடைந்ததை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, எஸ்.குமரவேல், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.