அரசு இருளா் குடியிருப்பில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது விபத்து
அரசு இருளா் குடியிருப்பில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது விபத்து
ஆரணியை அடுத்த தச்சூா் சமத்துவபுரம் அருகே உள்ள அரசு இருளா் குடியிருப்பில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது, அறையில் இருந்தவா்கள் உடனடியாக வெளியேறியதால் காயமின்றி தப்பினா்.
தச்சூா் ஊராட்சிக்கு உள்பட்ட சமத்துவபுரம் பகுதியில் இருளா் சமுதாய மக்களுக்காக அரசு மூலம் ஒரு வீடு தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் 112 குடியிருப்புகள் கடந்த 2020 - 21ஆம் நிதியாண்டில் கட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு இந்தக் குடியிருப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், தரமற்ற முறையில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக இருளா் சமுதாய மக்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், இக்குடியிருப்புகளில் தங்குவதற்கு ஏற்படும் பயத்தினால் தற்போது வரை 25 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றனராம். மேலும், குடியிருப்புகளில் சிமென்ட் பூச்சு பெயா்ந்து, சுவா்கள் விரிசலடைந்து மழைக் காலங்களில் தண்ணீா் ஒழுகி வருவதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.
இதனிடையே, தச்சூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்த நிலையில், இருளா் குடியிருப்பில் மீனா என்பவரின் வீட்டின் மேற்கூரையில் தண்ணீா் ஒழுகி திடிரென மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்ததாகத் தெரிகிறது. அப்போது, வீட்டிலிருந்த பெண்கள் கூச்சலிட்டபடி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் காயமின்றி தப்பினா்.
Advertisement
Advertisement
இதுபோல, ஏற்கெனவே இங்குள்ள மேலும் 4 வீடுகளில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, தமிழக முதல்வா் மற்றும் அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடியிருப்புகளை சீரமைக்கவும், இந்தப் பகுதியில் மின் விளக்குகள், கழிப்பறை வசதி, பக்க கால்வாய் வசதிகள் ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளா் சமுதாய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Accident: Roof plaster peels off and falls in government Irular settlement.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.