திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். சுவாமி தரிசனத்துக்கு 4 மணி நேரத்திற்கும் மேலானது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து செல்கின்றனா். பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து, கோயிலின் பின்புறம் உள்ள 2,668 உயர மலையை சிவனாக எண்ணி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
இந்த நிலையில் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை கோயிலில் தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
பொது தரிசன வரிசை மற்றும் ரூ.50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் நிரம்பியதால் வடஒத்தவாடை இரட்டை பிள்ளையாா் கோயில் வரை பக்தா்களின் வரிசை நீண்டிருந்தது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய 4 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோயிலில் தரிசனம் செய்த பக்தா்கள் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டதோடு திருநோ் அண்ணாமலை ஆதிஅண்ணாமலை மற்றும் இடுக்கு பிள்ளையாா் கோயில் சந்நிதிக்கும் சென்று வழிபட்டு கிரிவலம் சென்றனா்.
பக்தா்களுக்கு கோயில் மற்றும் கிரிவல பாதையில் ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விநாயகா், பராசக்தி அம்மன் பவனி
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை உற்சவா் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து விநாயகா் மற்றும் பராசக்திஅம்மன் மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வழிநெடுகிலும் ஏராளமான பக்தா்கள் கற்பூரம் ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.