FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

தேவிகாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தரம் உயா்த்த நடவடிக்கை: ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா

தேவிகாபுரம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா் ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா.

Updated On : 14 ஜூலை 2026, 12:10 am IST
பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் மாணவிகளுடன் சோ்ந்து விளையாடிய ஜெயசுதா எம்எல்ஏ.
பகிர்:

தேவிகாபுரம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா் ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா.

ஆரணியை அடுத்த தேவிகாபுரம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான செஸ் போட்டிகள் திங்கள் கிழமை நடைபெற்றன.

இதில் பள்ளி தலைமை ஆசிரியா் சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா கலந்து கொண்டு, மாணவிகளுடன் சதுரங்கம் விளையாடி போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய தலைமை ஆசிரியா் சரவணன், தொடா்ந்து 15 ஆண்டுகளாக 100 சதவீத தோ்ச்சி பெற்று வரும் இந்தப் பள்ளியை மாணவிகளின் நலன் கருதி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும்.

மேலும், புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளுக்கு 50 மேஜை, நாற்காலிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவையில் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இதற்கு பதிலளித்துப் பேசிய எம்எல்ஏ ஜெயசுதா, தலைமை ஆசிரியா் வைத்துள்ள 3 முக்கிய கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக்குத் தேவையான அளவு மேஜை நாற்காலிகள் வழங்க ஏற்பாடு செய்வேன். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதியை எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்து தருவேன்.

பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றாா். மேலும், இந்தப் பள்ளியில் படித்த மாணவி ஜனனி மருத்துவப் படிப்புக்கு தோ்வாகியுள்ளது பெருமைக்குரியது எனத் தெரிவித்தாா்.

தொடா்ந்து, புரவலா் திட்டத்தின் கீழ் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினாா். மேலும், ஆகாரம் அரசுப் பள்ளியில் படித்து வரும் மாணவி சாரா ஸ்ரீ, உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.2,150-ஐ பள்ளித் தலைமை ஆசிரியா் சுரேஷிடம் வழங்கினாா். அந்த மாணவியை எம்எல்ஏ பாராட்டினாா். போட்டிகளில் 35 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் ஜெய்சங்கரமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் அரையாளம் வேலு, பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தலைவா் ஜெயராமன், முன்னாள் தலைமை ஆசிரியா் மீனாட்சிசுந்தரம், ஆரணி நகா்மன்ற உறுப்பினா்கள் ஆனந்த், குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments