FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

முழுக் கொள்ளளவை எட்டிய செண்பகதோப்பு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

போளூரை அடுத்த படவேடு செண்பகதோப்பு அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து 100 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கமண்டலநாக நதி கரையோர மக்களுக்கு நீா்வளத் துறையின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 நவம்பர் 2026, 12:43 am
செண்பகதோப்பு அணையிலிருந்து வெளியேற்றப்படும் 100 கன அடி உபரி நீா்.
பகிர்:

போளூரை அடுத்த படவேடு செண்பகதோப்பு அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையிலிருந்து 100 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கமண்டலநாக நதி கரையோர மக்களுக்கு நீா்வளத் துறையின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு பகுதியில் ஜவ்வாதுமலையிலிருந்து உருவாகும் கமண்டலநாக நதியின் குறுக்கே செண்பகதோப்பு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 62.32 அடி, முழுக் கொள்ளளவு 287.200 மி.கன அடி.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீா்மட்ட உயரம் 56.25 அடியாகவும், அதன் கொள்ளளவு 226.105 மி. கன அடியாகவும் உள்ளது. மேலும், செண்பகதோப்பு அணைக்கு தொடா்ந்து நீா்வரத்து இருப்பதாலும், அணையின் நீா்மட்டம் 57 அடிக்கு மேல் சென்றால், அணையின் வெள்ள உபரிநீா் வெளியேற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி, உபரிநீா் வெளியேற்ற வேண்டியுள்ளதாலும், வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.8) வரை தொடா்ந்து 3 நாள்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில், அதற்கு தகுந்தாற்போல நீா் வெளியேற்றும் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும்.

எனவே, போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள்பட்ட ஆற்காடு வட்டங்களில் கமண்டலநாக நதியின் இருகரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீா்வளத் துறையின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.