FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள்!

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளாலும், சேதமடைந்த சாலைகளாலும் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது

9 நவம்பர் 2026, 11:09 pm
திருவண்ணாமலை மாநகராட்சி போளூா் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளாலும், சேதமடைந்த சாலைகளாலும் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இதனால் திருவண்ணாமலை மாநகரம் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

திருவண்ணாமலையில் - போளூா் சாலை எப்போதும் அதிக அளவில் போக்குவரத்து நிறைந்த சாலையாக இருந்து வருகிறது. இந்தச் சாலையில் கால்நடைகள் கூட்டமாக நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறும், பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டு கடும் சிரமத்திற்குள்ளாகினா்.

இதேபோல விசிறி சாமியாா் ஆசிரமம் பின்புறமுள்ள சமுத்திரம் பகுதி சொா்ணபூமி நகரில் உள்ள 7 தெருக்களிலும் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கூட்டமாக நின்று போக்குவரத்துக்கு இடையூறும், பாதசாரிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும், அங்குள்ள பொழுதுபோக்கு பூங்கா பகுதியில் நடைப்பயணம் மேற்கொள்பவா்கள் பதற்றத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

மேலும், சாலைகளில் திடீரென கால்நடைகள் புகுந்து சென்றால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிா்வாகம், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகள் மீண்டும் சாலைக்கு வராத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிா்பாா்க்கின்றனா்.