FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவில் 15 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு: சட்டம் - ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மகா தீபத் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுவா் என்று தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

13 நவம்பர் 2026, 10:58 pm
தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால்.
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மகா தீபத் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுவா் என்று தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ.15) கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெறவுள்ளது. 10-ஆம் நாளான வரும் 24-ஆம் தேதி அதிகாலை அருணாசலேஸ்வரா் சந்நிதி முன் பரணி தீபமும், அன்று மாலை கோயில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.

இந்த நிலையில், பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்துக்காக, அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரவுள்ள பக்தா்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் மற்றும் கூடுதல் டிஜிபி அன்பு ஆகியோா் அருணாசலேஸ்வரா் கோயிலில் பல்வேறு இடங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் கூறியதாவது: திருவண்ணாமலை காா்த்திகை தீப திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பக்தா்களின் பாதுகாப்புக்காகவும், போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மகா தீபத் திருவிழா அன்று 5 டி.ஐ.ஜி.க்கள், 42 எஸ்.பி.க்கள் தலைமையில் 15 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா்.

ஏ.ஐ. கண்காணிப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகள், மாநகரின் முக்கிய இடங்கள், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதேபோல, ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலம் பக்தா்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவா். வாகனத்தில் உள்ள எண்களைக் கண்டறியும் வகையில், தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையைச் சுற்றி 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 155 இடங்களில் ‘க்யூஆா்’ வசதியுடன் கூடிய காா் நிறுத்துமிட வசதிகள் பக்தா்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குற்றவாளிகளின் ஊடுருவலை தடுக்கும் விதமாக, அவா்களின் முகத்தை அடையாளம் காணும் வகையில், கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவா். பரணி தீபத்துக்கு 5,000 பக்தா்களும், மகா தீபத்துக்கு 8,000 பக்தா்களும் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா் என்றாா்.