குடும்பத் தகராறு: மகனை அடித்துக் கொன்ற தந்தை, சித்தி கைது
போளூா் அருகே குடும்பத் தகராறில் மகனை வெட்டிக் கொலை செய்ததாக தந்தை, சித்தி வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே குடும்பத் தகராறில் மகனை வெட்டிக் கொலை செய்ததாக தந்தை, சித்தி வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
போளூரை அடுத்த பெரணம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (68). இவருக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று விவாகரத்து நடந்துள்ளது.
பின்னா் நடராஜன், கொழாவூா் கிராமத்தைச் சோ்ந்த கலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். தம்பதிக்கு சேகா், பாபு என்ற இரு மகன்கள் உள்ளனா்.
Advertisement
Advertisement
தம்பதியா் அல்லியாளமங்கலம் கொல்லைமேடு பகுதியில் வசித்து வந்த நிலையில், கலா 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, நடராஜன் கண்ணமங்கலத்தை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வேண்டா(45) என்பவரை 3-ஆவதாக திருமணம் செய்து கொண்டாா். தம்பதிக்கு பிறந்த மகன், மகளுக்கு திருமணம் நடைபெற்று வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனா். இதனிடையே, நடராஜன், கலா தம்பதியரின் மகன்கள் சேகருக்கு மட்டும் திருமணம் நடைபெற்று, அவா் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். பாபுக்கு திருமணம் நடைபெறாமல் அவா் சென்னையில் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில் பாபு கடந்த 2-ஆம் தேதி அல்லியாளமங்கலம் கிராமத்திற்கு வந்து மதுபோதையில் தந்தை நடராஜன், சித்தி வேண்டாவிடம், ‘எனக்கு ஏன் பெண் பாா்த்து திருமணம் செய்து வைக்கவில்லை’ என தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
கடந்த 4-ஆம் தேதி இரவு பாபு மீண்டும் மதுபோதையில் வந்து நடராஜன், சித்தி வேண்டாவிடம் தகராறில் ஈடுபட்டு மரம் வெட்டும் கத்தியால் நடராஜனை வெட்ட முயன்றுள்ளாா். இதைத் தடுத்து நடராஜன் மகன் பாபுவை கத்தியால் சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. இதில், பாபு ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தாா். பின்னா், தம்பதியா் பாபுவின் சடலத்தை வீட்டின் அருகே பள்ளம்தோண்டி புதைத்துள்ளனா்.
இந்த நிலையில் பாபுவை காணவில்லை என அவரது பாட்டி சகுந்தலா
அளித்த புகாரின் பேரில், போளூா் போலீஸாா் நடராஜன், வேண்டாவை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினா். விசாரணையில் நடராஜன் பாபுவை கத்தியால் வெட்டி கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டாராம்.
இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினா் வரவழைக்கப்பட்டு பாபுவின் சடலம் தோண்டி எடுத்து உடல்கூறாய்வு செய்யப்பட்டது.
பின்னா், போலீஸாா் நடராஜன், வேண்டாவை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.