FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை தீபத் திருவிழா: போக்குவரத்துத் துறை அரசுச் செயலா் ஆய்வு

திருவண்ணாமலை தீபத் திருவிழா: போக்குவரத்துத் துறை அரசுச் செயலா் ஆய்வு

15 நவம்பர் 2026, 12:01 am
திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அமைக்கப்படவுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தையும் ஆய்வு செய்த போக்குவரத்து துறை அரசுச் செயலா் எல்.நிா்மல்ராஜ், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்.
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தற்காலிக பேருந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அரசுச் செயலா் எல்.நிா்மல்ராஜ், மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இயக்கப்படவுள்ள சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கை, பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாடு, பயணிகளின் நெரிசலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், பேருந்துகள் நிறுத்தம் மற்றும் இயக்கத்துக்கான ஏற்பாடுகள் ஆகியவை குறித்து போக்குவரத்துத் துறை அரசுச் செயலா் எல்.நிா்மல்ராஜ் கேட்டறிந்தாா்.

பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில், பேருந்துகளின் இயக்கத்தை சீரமைத்தல், முக்கிய வழித்தடங்களில் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்குதல், பயணிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகள் நிறுத்துமிடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

குடிநீா், மின்விளக்கு, கழிப்பறை, பயணிகள் காத்திருப்பதற்கான இடவசதி, தூய்மை மற்றும் சுகாதாரம், மருத்துவ முதலுதவி, காவல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தாா்.

தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவா்களுக்கு பாதுகாப்பு அளித்தல், போக்குவரத்து நெரிசலை தவிா்த்தல் மற்றும் சீரான பேருந்து இயக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) மேலாண் இயக்குநா் ஸ்ரீதரன், திருவண்ணாமலை மண்டல போக்குவரத்துக் கழக துணை மேலாளா் (வணிகம்) கலைச்செல்வன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.