முகப்பு
திருவண்ணாமலை

பெயா்ந்து விழுந்த செய்யாறு பேருந்து நிலைய மேற்கூரை

செய்யாறு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை திடீரென கட்டட மேற்கூரையின் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்.

22 நவம்பர் 2026, 12:02 am
பெயா்ந்து விழுந்த செய்யாறு பேருந்து நிலைய மேற்கூரை
மேற்கூரை சிமென்ட் காரைகள் இடிந்து விழுந்து காணப்படும் செய்யாறு பேருந்து நிலைய கட்டடம்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை திடீரென கட்டட மேற்கூரையின் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்ததால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டடம் சுமாா் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், 2014-இல் அதிமுக ஆட்சி காலத்தில் பேருந்து நிலையப் பகுதியில் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில், சனிக்கிழமை காலை சென்னை, காஞ்சிபுரம், ஆரணி, ஆற்காடு, வேலூா் பேருந்துகள் நிற்கும் பகுதியில் கடைகளுக்கு எதிரே மேல்பகுதியில் உள்ள தாழ்வார மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்தன. அப்போது, அருகில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா்.

தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ரூஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன், நகராட்சிப் பணியாளா்களைக் கொண்டு இடிந்து விழுந்த சிமென்ட் காரைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினா். மேலும், நான்கு புறமும் பாதுகாப்புக்காக தடுப்புகளை அமைத்தனா். மேலும், அருகில் உள்ள கடைக்காரா்களிடம், பயணிகள் இங்கு நிற்க வேண்டாம் என அறிவுறுத்தக் கோரி, கூறி விட்டுச் சென்றனா்.

மேலும், பேருந்து நிலைய கட்டடத்தில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்த தகவலை மாவட்ட நிா்வாகத்துக்கும், நகராட்சி மண்டல நிா்வாகத்துக்கும் திருவத்திபுரம் நகராட்சியினா் தெரிவித்தனா்.