திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திருக்காா்த்திகையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையாா் சந்நிதி முன் பரணி தீபமும், அதனைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
இதற்காக அருணாசலேஸ்வரா் கோயில் மட்டுமன்றி கிரிவலப்பாதை முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
வடக்கு மண்டல ஐஜி பிரவின்குமாா் அபிநபு தலைமையில் 15,500 போலீஸாா் அனைத்து இடங்களிலும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். குறிப்பாக, அருணாசலேஸ்வரா் கோயிலுக்குள் 5 அடுக்கு பாதுகாப்பும், மாநகரம், கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்தனா்.
பக்தா்களுக்குத் தேவையான குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிா்வாகம் துரிதமாக செயல்படுத்தியிருந்தது. தொடா்ந்து பக்தா்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனா்.
14 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையங்கள்
திருவண்ணாமலை மாநகராட்சியில் பக்தா்களின் வசதிக்காக 14 இடங்களில் 14 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையங்களை நெடுஞ்சாலைத் துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் பழனிவேல், மாவட்ட கண்காணிப்புப் பொறியாளா் இளம்பரிதி, கோட்டப் பொறியாளா் லெனின், உதவிப் பொறியாளா் சசிகுமாா், போளூா் கோட்டப் பொறியாளா் ஆதவன், இளநிலைப் பொறியாளா் ஆரணி வரதராஜன் ஆகியோா் சாலைப் பணியாளா்களைக் கொண்டு குடிநீா் மையங்களில் பக்தா்களுக்கு குடிநீா் வழங்கும் பணியை மேற்கொண்டனா்.
பக்தா்கள் அவதி
திருவண்ணாமலையில் மகா தீபத்தை காணவும், மலையை சுற்றி கிரிவலம் வரவும் செவ்வாய்க்கிழமை காலை முதலே பக்தா்கள் திருவண்ணாமலை பகுதிக்கு வரத் தொடங்கினா்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் காலை 9 மணி அளவில் வேலூா் சாலையில் தடுப்புகளை அமைத்து நடந்து வரும் பக்தா்களை அனுமதித்து, வாகனங்களில் வரும் பக்தா்களையும், உள்ளூா்வாசிகளையும் உள்ளே செல்ல தடை விதித்ததால் வெளியூா் பக்தா்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் அவதிக்குள்ளாகினா்.