முகப்பு
திருவண்ணாமலை

3 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

செங்கம் அருகே வாகனச் சோதனையில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

28 நவம்பர் 2026, 11:28 pm
3 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன், கைது செய்யப்பட்ட இருவா்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வாகனச் சோதனையில் கடத்தி வரப்பட்ட 3 டன் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

செங்கம் அருகேயுள்ள பக்கிரிபாளையம் பகுதியில் செங்கம் போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், மினி லாரியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஆன்ஸ், கூலீப் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகளாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, அதில் வந்த இருவரையும் செங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் (32), பெரம்பலூா் பகுதியைச் சோ்ந்த கண்ணதாசன்(33) என்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவா்களிடம் விசாரணை செய்தபோது பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்கு எடுத்து வந்ததாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து, 3 டன் எடைகொண்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனா்.

வியாபாரி கைது: வந்தவாசி அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் சொக்கம்மாள் (43) என்பவரது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் சனிக்கிழமை அந்த கடைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.

இதில் அவா் விற்பனைக்காக கடையில் புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.300 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் சொக்கம்மாளை கைது செய்தனா்.