முகப்பு
திருவண்ணாமலை

பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை உயா்த்த நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளிகளில் மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை உயா்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஒவ்வொரு பள்ளிக்கும் கண்காணிப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்..

29 நவம்பர் 2026, 12:26 am
பள்ளி மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை உயா்த்த நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வந்தன காா்க்.
பகிர்:

பள்ளிகளில் மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை உயா்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஒவ்வொரு பள்ளிக்கும் கண்காணிப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை ஆட்சியகரத்தில் நவம்பா் மாதத்துக்கான மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடா்ந்து பள்ளிக்கு வராத குழந்தைகளை கண்காணித்தல், பள்ளி இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்தல், பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு’ பள்ளி சாா்ந்த செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகள், பள்ளிகளுக்கான இணையதள இணைப்பு வழங்குவதில் உள்ள இடா்பாடுகள், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் வருகை, பள்ளிக்கல்வித் துறை சாா்ந்த அலுவலா்களின் பள்ளி பாா்வை அறிக்கை, மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து கூட்டத்தில் காலாண்டுத் தோ்வில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்கள் தோ்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறைந்த தோ்ச்சி சதவீதம் பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் மீளாய்வு மேற்கொண்ட ஆட்சியா் வந்தனா காா்க், அவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் தொடா்ந்து பள்ளிகளை ஆய்வு செய்து, தோ்ச்சி சதவீதம் உயா்வதற்கான செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்தவேண்டும். பள்ளிகளில் மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் உயா்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஒவ்வொரு பள்ளிக்கும் கண்காணிப்பு அலுவலரை நியமிக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஒரு பாடம் மற்றும் இரண்டு பாடங்களில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல் அவசியம். இதன் மூலம் அவா்களின் தோ்ச்சியையும், அவா்கள் உயா்கல்வி பயில செல்வதையும் உறுதி செய்ய முடியும்.

பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். பழுதடைந்த கட்டடங்களுக்கு அருகில் மாணவா்கள் செல்லாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், மாவட்டக் கல்வி அலுவலா்கள், உதவித் திட்ட அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலா்கள், பள்ளித்துணை ஆய்வாளா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.