தங்கையின் கணவரை எரித்து கொன்றவருக்கு ஆயுள் சிறை
வேலூரில் தங்கையின் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து வேலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
வேலூரில் தங்கையின் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து வேலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
வேலூர் வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கரன் (27). இவரது தங்கை ஆஷாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சங்கருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆஷாவுக்கும், சங்கருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது இருவரையும் ஜெயக்கரன் சமாதானம் செய்து சேர்த்து வைத்துள்ளார். இதேபோல், கடந்த 2017 பிப்ரவரி 24-ஆம் தேதி ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த ஜெயக்கரன், சங்கருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் சங்கர் மீது ஜெயக்கரன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த சங்கர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து வேலூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெயக்கரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், குற்றம்சாட்டப்பட்ட ஜெயக்கரனுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொரு வழக்கு...: காட்பாடி பள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி அம்ஷா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அம்ஷாவுக்கு தாய் வீட்டு சீதனமாகக் கொடுக்கப்பட்ட 20 சென்ட் நிலத்தை அவர் இறந்த பிறகு தான் அனுபவித்துக் கொள்ள முனிரத்தினம் கோரியுள்ளார். அதற்கு அம்ஷாவின் சகோதரர் ராஜேந்திரன் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக முனிரத்தினம் காட்பாடி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும், ராஜேந்திரன் நிலத்தை ஒப்படைக்காததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கடந்த 2016 ஆகஸ்ட் 28-ஆம் தேதி முனிரத்தினத்தை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன், இந்த வழக்கில் முனிரத்தினத்தை ராஜேந்திரன்தான் கொலை செய்தார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஆதாரங்களை உரிய முறையில் சமர்ப்பிக்கத் தவறிய அப்போதைய காட்பாடி காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மீது நடவடிக்கை எடுக்க வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர், வேலூர் எஸ்.பி., ஆட்சியர் ஆகியோருக்கும் பரிந்துரை செய்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.