14 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம்: பொருள்கள் சேதம்
வேலூரில் அடுத்தடுத்து 14 கூரை வீடுகள் தீயில் கருகின. இந்த விபத்தில் கூரை வீடுகளில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புடைய பொருள்கள் சேதமடைந்தன.
வேலூரில் அடுத்தடுத்து 14 கூரை வீடுகள் தீயில் கருகின. இந்த விபத்தில் கூரை வீடுகளில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புடைய பொருள்கள் சேதமடைந்தன.
வேலூர் டவுன் ரயில் நிலையம் அருகே உள்ளது சம்பத் நகர். இப்பகுதியில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதில் பெரும்பாலான குடும்பத்தினர் கூலித் தொழில் புரிந்து வருகின்றனர். அப்பகுதியில் புதன்கிழமை மதியம் பூட்டியிருந்த சகின்ஷாவுக்கு (40) சொந்தமான கூரை வீட்டில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து, தீயானது வேகமாக கூரை முழுவதும் பரவியதை அடுத்து அருகே இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், காற்றின் வேகத்தில் அந்த கூரையில் பற்றிய தீ, அருகே அடுத்தடுத்து இருந்த 13 கூரை வீடுகளிலும் பற்றியது. அத்துடன், அப்பகுதியில் உள்ள காமாட்சி (45), சுமித்ரா (28) ஆகியோரது வீடுகளிலிருந்த சமையல் கேஸ் சிலிண்டர்களும் வெடித்துச் சிதறியதில் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதற்குள் கூரை வீடுகளுக்குள் இருந்தவர்கள் வெளியேறி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
தகவலறிந்த வேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் 5 தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், சார்-ஆட்சியர் கே.மேகராஜ், வட்டாட்சியர் எஸ்.பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், 14 கூரை வீடுகளில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், துணிகள், உணவுப் பொருள்கள், பணம், நகை என லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய உடமைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. அத்துடன், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மதிப்பெண் சான்றிதழ் போன்ற அத்தியாவசிய சான்று, ஆவணங்கள் தீக்கிரையாகின. இதுகுறித்து, உடமைகளை இழந்த சுமித்ரா கூறியதாவது:
அரசுப் புறம்போக்கு நிலத்தில் கூரை வீடு அமைத்து பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். அருகிலுள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறோம். புதன்கிழமை மதியம் வேலைக்குச் சென்றிருந்தபோது, கூரை வீடு தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்து வந்தோம். அப்போது, எங்களது கூரை வீடு முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. வீட்டிற்குள் இருந்த எந்தப் பொருள்களையும் காப்பாற்ற இயலவில்லை என்றார்.
இந்த விபத்து குறித்து வட்டாட்சியர் எஸ்.பாலாஜி கூறியதாவது:
சம்பத் நகர் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இப்பகுதியில் புதன்கிழமை மதியம் ஒரு கூரை வீட்டில் பற்றிய தீ, அடுத்தடுத்து 13 கூரை வீடுகளுக்கும் பரவி பெரும் விபத்தாக மாறியது. பெரும்பாலான குடும்பத்தினர் வேலைக்குச் சென்றிருந்ததாலும், வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறிவிட்டதாலும் யாருக்கும் காயமோ, உயிர் பாதிப்போ ஏற்படவில்லை. எனினும், வீடுகளில் இருந்த உடமைகள் தீயில் கருகியுள்ளன.
அரசு நிவாரணமாக 14 குடும்பத்தினருக்கும் தலா ரூ. 5 ஆயிரம், 5 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை வழங்கப்படும். மேலும், தற்காலிக ஏற்பாடாக அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
தெருவிற்கு வந்த குடும்பங்கள்...
வேலூர் சம்பத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 குடும்பத்தினர் முழுவதும் உடமைகளை இழந்துள்ளனர். பெரும்பாலான குடும்பத்தில் பள்ளி மாணவ, மாணவிகள், கைக் குழந்தைகளும் உள்ளனர். உடமைகளை முழுவதும் இழந்தை அடுத்து அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. அக்குடும்பத்தினருக்கு அரசு சார்பில் மிகக்குறைந்த உதவியே அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தினர் மீண்டும் நல்ல நிலைக்கு வர தனியார், வசதி படைத்தோர் உதவிகள் புரிந்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.