சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்
சிப்காட் பேஸ் 3 தொழிற்பேட்டை சாலையைச் சீரமைக்கக் கோரி பாமகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிப்காட் பேஸ் 3 தொழிற்பேட்டை சாலையைச் சீரமைக்கக் கோரி பாமகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டை அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் சிப்காட் பேஸ் 3 தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இங்கிவருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களைக் கொண்டுவரவும், உற்பத்திப் பொருள்களை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லவும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வந்துசெல்கின்றன. இதனால், லாலாப்பேட்டை பிரதான சாலை, பெல் ஆன்சிலரி சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாகக் காணப்படுகின்றன. சேதமடைந்த சாலைகளால் விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சிப்காட் பேஸ் 3 தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு சென்னையில் இருந்து தலா 25 டன் எடையுள்ள 2 இரும்பு பாரம் ஏற்றிய கனரக லாரி புதன்கிழமை வந்தது. சிட்கோ பகுதி சாலை வளைவில் லாரி திரும்பியபோது, இரும்பு பாரம் சாலையின் நடுவே விழுந்தது. அப்போது, அவ்வழியாக யாரும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தகவலறிந்த வேலூர் கிழக்கு மாவட்ட பாமக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சரவணன் தலைமையில், வாலாஜாபேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஜோதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பாமகவினர் விபத்து நிகழ்ந்த இடத்தில் திரண்டனர்.
தொழிற்பேட்டைக்கு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால்தான் லாலாப்பேட்டை சாலை சேதமடைந்து விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சிப்காட் காவல் உதவி ஆய்வாளர் அருண்ராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சாலையைச் சீரமைக்கத் தேவையான நடவடிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.