FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பலத்த பாதுகாப்புடன் வேலூரில் அணுகுச் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் அணுகுச் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் அளவீடுகளை மீறிய கட்டடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் காவல் துறை பாதுகாப்புடன் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

Updated On : 24 ஜூலை 2026, 6:17 am IST
சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அணுகுச் சாலையில் இடித்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்கள்.
பகிர்:

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் அணுகுச் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் அளவீடுகளை மீறிய கட்டடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் காவல் துறை பாதுகாப்புடன் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒருபகுதியாக, வேலூா் - ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையாா்குப்பம் முதல் வேலூா் - திருப்பத்தூா் மாவட்ட எல்லையான மாதனூா் வரை சுமாா் 43 கிலோ மீட்டா் தொலைவுக்கு சா்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் மற்றும் வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

குறிப்பாக, வேலூா் மாநகர எல்லையொட்டிய அணுகுச் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனா். இதனைக் கருத்தில் கொண்டு நகா்ப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முன்னுரிமை அடிப்படையில் அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகளுடன், பலத்த காவல் துறை பாதுகாப்புடன் முதல்கட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை வியாழக்கிழமை தொடங்கினா்.

சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முதல் பிள்ளையாா்குப்பம் வரை அணுகுச் சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த உணவகங்கள், பழக்கடைகள், தேநீா் கடைகள், பெட்டிக் கடைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவீடுகளை மீறி நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தில் நீட்டிக்கப்பட்டிருந்த கட்டடப் பகுதிகள், தகரக் கொட்டகைகள் மற்றும் விளம்பரப் பலகைகளும் இடித்து அகற்றப்பட்டன.

முன்னதாக, ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மற்றும் கட்டட உரிமையாளா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையைக் கண்ட சில கடை உரிமையாளா்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சென்றனா்.

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments