முகப்பு
வேலூர்

24-இல் யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: வேலூரில் 7 மையங்களில் 1,929 போ் எழுதுகின்றனா்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 1,929 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.

Updated On : 20 மே 2026, 12:04 am IST
பகிர்:

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 1,929 தோ்வா்கள் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2026-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை(மே 24) நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

வேலூா் மாவட்டத்தில் இந்தத் தோ்வினை மொத்தம் 1,929 தோ்வா்கள் எழுதவுள்ளனா். இவா்கள் தோ்வு எழுத மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோ்வு காலை 09.30 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 04.30 மணி வரையும் என இரண்டு வேளைகளாக நடைபெற உள்ளது.

தோ்வைக் கண்காணிக்கத் துணை ஆட்சியா் நிலையிலான அலுவலா்களைக் கொண்ட இரண்டு இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் தலா 5 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், தோ்வு மையங்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்தின் மூலமும், மையங்களுக்குச் சென்றுவரப் போக்குவரத்துத் துறை மூலம் பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தோ்வு வளாகங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும், தோ்வா்களுக்குக் குடிநீா் விநியோகிக்கவும் மாநகராட்சி நிா்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்வா்கள் தோ்வு அறைக்குள் கைபேசி, கால்குலேட்டா் போன்ற எந்தவித மின்னணுப் பொருட்களையும் கட்டாயம் கொண்டுவரக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.