முகப்பு
வேலூர்

அம்மன் சிரசில் வியர்வைத் துளிகள்

கெங்கையம்மன் சிரசு காலையில் உற்சாகமாய், ஆனந்தமாய், மகிழ்ச்சியாய் தாய் வீட்டுக்கு வருவார்.

பகிர்:

கெங்கையம்மன் சிரசு காலையில் உற்சாகமாய், ஆனந்தமாய், மகிழ்ச்சியாய் தாய் வீட்டுக்கு வருவார். அம்மன் சிரசு மண்டபத்தில் பொருத்தப்படும்போது சாந்தச் சொரூபியாய் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். மாலையில் வீடு திரும்பும்போது, சோகமாய் திரும்புவார். சுண்ணாம்புப்பேட்டை படித்துறையின் அருகே இரவு திரும்பும்போது, குறிப்பிட்ட எல்லையில் உக்கிரமாய்க் காட்சியளிப்பார். அப்போது அவரது முகம் யாரும் காணாதவாறு மூடப்படும். ஒரே நேரத்தில் ஆனந்தம், சோகம், உக்கிரம் என மூன்று நிலைகளிலும் இருக்கும் கெங்கையம்மனை குடியாத்தத்தில் மட்டுமே காணமுடியும். மாலையில் திரும்பும்போது அம்மனின் சிரசுவில் இருந்து வியர்வைத் துளிகள் வருவது கண்கொள்ளா காட்சியாகும். மனிதர்களால் செய்யப்படும் மண் சிலையில் இருந்து வியர்வைத் துளி வருவது இங்கு மட்டுமே என்கிறார் சமூக ஊடகங்களில் கெங்கையம்மன் குறித்து ஆன்மிக உரைகளை நிகழ்த்தும் பாலாறு வேலாயுதம் சுவாமிகள்.

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழாவன்று ஆன்மிக உரை நிகழ்த்தும் அவர் அம்மன் மகிமைகளாக கூறியது:

பாலும் தேனும் ஓடிய ஆறு பாலாறு. அதன் உபநதியான கௌண்டன்ய மகாநதி குடியாத்தத்தில் பாய்கிறது. குடியாத்தம் என்ற ஊர் முதலில் குடியேற்றம் என்றே இருந்தது. குடியேற்றம் என்பது மனிதர்கள் குடியேறியதல்ல. சித்தர்களும், மகான்களும் குடியேறி, இங்கு தவம் புரிந்தனர். கௌண்டன்ய மகரிஷியும் இங்கு தவம் புரிந்ததால்தான் இந்தப் பெயர்.

Advertisement

Advertisement

ஜமத்கனி-பரசுராமர் புராண வரலாறு உணர்த்துவது என்னவெனில், எல்லோரும் சமம். ஜாதி, மத பேதமின்றி அனைவரும் சமம் என்பதற்காகவே வைகாசி திருவிழாவுக்காக மூன்று பிரிவு மனிதர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பதைப் போல், தலைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண் சக்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான இந்த விழாவில், நேர்த்திக் கடன் செலுத்துவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.

வேலூர் மாவட்டம் ஆன்மிகரீதியாக, கிரக ரீதியாக செவ்வாய்க்கு அதிபதி. இதனால்தான் இங்கு ராணுவ வீரர்கள் அதிகம். நாட்டில் முதல் புரட்சியான சிப்பாய் புரட்சியும் வேலூரில் ஏற்பட்டது. குடியாத்தம் திருவிழாவுக்கு அதனால்தான் மாவட்ட விடுமுறையும் விடப்படுகிறது.

வைகாசி திருவிழாவுக்கு அளிக்கப்படும் கும்பச் சோறு நோய்களுக்கான அருமருந்து. சைவம், அசைவம் என்று பல வகை உணவுகளும் இணைந்த அந்த உணவு மூலிகை உணவாகவே இருக்கும். கோடைக்கால நோய்களைத் தடுக்கும் மருந்துதான் அது.

கெங்கையம்மனை வழிபடும்போது விரலி மஞ்சளை கையில் வைத்து வழிபட்டால், வேண்டியவை நிறைவேறும் என்பது சித்தர்களின் வாக்கு.

அம்மை நோய் அதிகரித்திருந்தபோது, ஜாதி, மத பேதமின்றி எல்லோரும் வழிபடுவது அம்மனையே என்று பேசினார் பாலாறு வேலாயுதம் சுவாமிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.