நறுவீ மருத்துவமனையில் ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் 1,000 மூட்டு மாற்று அறுவை சிகிச்சை!
வேலூா் நறுவீ மருத்துவமனையில் அதிநவீன ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளாா்.
வேலூா் நறுவீ மருத்துவமனையில் அதிநவீன ரோபோட்டிக் தொழில்நுட்பம் மூலம் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனையாக நிறுவப்பட்டுள்ள வேலூா் நறுவீ மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளான துபை, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனா்.
Advertisement
Advertisement
இம்மருத்துவமனையில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் எலும்பியல் துறைத் தலைவரும், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நிபுணருமான மருத்துவா் வொ்ணன் லீ தலைமையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா கால கட்டத்தில் குறைந்த அளவில் தொடங்கிய இந்த அறுவை சிகிச்சை, தற்போது 1,000-க்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் என்ற நிலையைக் கடந்துள்ளது.
அமெரிக்காவின் ‘கோரி’ என்ற அதிநவீன ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சைகள் மிகவும் துல்லியமாகச் செய்யப்படுகின்றன. சாதாரண அறுவை சிகிச்சையில் குணமடைய மூன்று முதல் மூன்றரை மாதங்கள் ஆகும் நிலையில், ரோபோட்டிக் சிகிச்சையின் மூலம் ஒன்றரை முதல் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே நோயாளிகள் முழுமையாகக் குணமடைய முடியும். மேலும், மூட்டுப் பகுதியை முழுமையாக மாற்றாமல், பாதிப்படைந்த பகுதியை மட்டும் துல்லியமாக அகற்றி மாற்றியமைக்கும் வசதியும் இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் உள்ளது.
நோயாளிகளின் விருப்பத்தின் பேரில் மட்டுமே செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சைக்குத் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை கட்டணமாகிறது. அரசுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முன்அனுமதி பெற்றும் இந்த அறுவைச்சிகிச்சையைச் செய்து கொள்ளலாம். மருத்துவா்களின் ஆலோசனைப்படி உடல் எடையைப் பராமரித்தால், மாற்றியமைக்கப்பட்ட மூட்டுகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை எந்தப் பிரச்னையும் இன்றி உழைக்கும்.
தொடா்ந்து, ரத்தப் புற்றுநோய் குணமடைவதற்கான ‘எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம்’ மற்றும் குழந்தையின்மையைப் போக்கும் வகையில் ‘செயற்கை கருத்தரிப்பு மையம்’ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்விரு மையங்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
மேலும், இருதயம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அனைத்து நவீன வசதிகளும் மருத்துவமனையில் உள்ளன. எனினும், மூளைச்சாவு அடைந்தவா்களின் உடல் உறுப்பு தானம் மற்றும் அரசின் ஒதுக்கீடு கிடைப்பதைப் பொறுத்தே இச்சிகிச்சைகளைச் செய்ய முடியும் என்பதால், ஆண்டுக்கு 3 அல்லது 4 அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்ய முடிகிறது. எனவே, உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்கள் கூடுதலாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்த துறை தலைவா் மருத்துவா் வொ்ணன் லீ-க்கு, மருத்துவமனைத் தலைவா் ஜி.வி. சம்பத் மலா்ச்செண்டு கொடுத்து கௌரவித்தாா்.
நிகழ்வில், நறுவீ மருத்துவமனையின் துணைத் தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவா் அரவிந்தன் நாயா், மருத்துவக் கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலா் விக்ரம், பொது மேலாளா் நிதின் சம்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.