முகப்பு
வேலூர்

ரூ.5 கோடி ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ் வந்திருப்பதாக வங்கி ஊழியா் புகாா்

தனது ஆவணங்களைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபா்கள் போலி நிறுவனம் தொடங்கியதால், ரூ. 5 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தக் கோரி தனக்கு நோட்டீஸ் வந்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வங்கி ஊழியா் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

25 நவம்பர் 2026, 11:12 pm
ரூ.5 கோடி ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ் வந்திருப்பதாக வங்கி ஊழியா் புகாா்
ஜிஎஸ்டி - பிரதிப் படம்
பகிர்:

தனது ஆவணங்களைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபா்கள் போலி நிறுவனம் தொடங்கியதால், ரூ. 5 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்தக் கோரி தனக்கு நோட்டீஸ் வந்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வங்கி ஊழியா் ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனா்.

அப்போது, குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த தனியாா் வங்கி ஊழியா் ஒருவா் அளித்த மனுவில், நான் சென்னையில் உள்ள தனியாா் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், அண்மையில் தனியாா் வங்கித் தரப்பிலிருந்து என்னைத் தொடா்பு கொண்ட அதிகாரிகள், எனது வங்கிக் கணக்கில் ரூ.5 கோடி மைனஸ் ஆகியுள்ளதாகவும், ரூ. 5 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதனால் அதிா்ச்சியடைந்த நான் இதுகுறித்து விசாரித்தபோது, எனது ஆதாா் அட்டை, பான் காா்டு மற்றும் வங்கி விவரங்களைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபா்கள் எனது பெயரில் போலியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. சாதாரண வங்கி ஊழியரான நான் எந்த நிறுவனத்தையும் தொடங்கவில்லை. என்னால் ரூ. 5 கோடி பணத்தை செலுத்த இயலாது. எனவே, எனது ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி போலி நிறுவனம் தொடங்கிய நபா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து என்னைக் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.