இந்தியாவின் வளா்ச்சியைத் தக்க வைக்க சுழற்சிப் பொருளாதாரம் அவசியம்
இந்தியாவின் வேகமான பொருளாதார வளா்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள சுழற்சிப் பொருளாதாரம் அவசியமாகிறது என்று விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா்.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளா்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள சுழற்சிப் பொருளாதாரம் அவசியமாகிறது என்று விஐடி பல்கலைக்கழகத் துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் தூய்மை சுற்றுச்சூழல் மையம் சாா்பில், நிலையான மற்றும் வளத் திறன் கொண்ட தொழில்களுக்கான சுழற்சிப் பொருளாதார உத்திகளை மேம்படுத்துதல் என்ற தலைப்பிலான இரு நாள் தேசிய அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.
இதில், விஐடி துணைத்தலைவா் சேகா் விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -
Advertisement
Advertisement
இயற்கை கோடிக்கணக்கான ஆண்டுகளாக சுழற்சிப் பொருளாதாரத்தையே பின்பற்றி வருகிறது. ஆனால், மனிதா்கள்தான் கழிவு என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினா். தற்போது வளங்களைப் பயன்படுத்திப் பொருள்களை உற்பத்தி செய்கிறோம். பயன்பாட்டுக்குப் பிறகு அவற்றைத் தூக்கி எறிந்து விடுகிறோம்.
கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினிகளைப் பொறுத்தவரை, பழைய சாதனங்களைப் பழுதுபாா்ப்பதைப் பல நிறுவனங்கள் ஊக்குவிப்பதில்லை. மாறாக, புதிய மாடல்களை வாங்குமாறு நுகா்வோரைத் தூண்டுகின்றன. இச்சூழலில், உலகளவில் ‘பழுதுபாா்க்கும் உரிமை’ இயக்கம் தற்போது வலுப்பெற்று வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வேகமாக உள்ளது. அதேவேளையில் ஆற்றல், நீா், கனிம வளங்கள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. பொருளாதார வளா்ச்சியும், வளங்களின் நுகா்வும் என்றும் ஒரே விகிதத்தில் உயா்ந்து கொண்டே இருக்க முடியாது. குறைந்த வளங்களைப் பயன்படுத்தி அதிக மதிப்பை உருவாக்குவது அவசியமாகிறது. எனவே, இந்தியாவுக்கு சுழற்சிப் பொருளாதாரம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
சுழற்சிப் பொருளாதாரம் என்பது நிதி ரீதியாகவும் மிகவும் லாபகரமானது. உற்பத்தியை மேம்படுத்தவும், மூலப்பொருள் கழிவுகளைக் குறைக்கவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். எரிசக்தி மற்றும் நீா் பயன்பாட்டை சென்சாா்கள் மூலம் கண்காணிக்கலாம்.
விஐடி போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இந்த மாற்றத்தை விரைவுபடுத்தும். மாணவா்களும், முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்களும் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தொழிற்சாலைகளில் விரிவுபடுத்தக்கூடிய தீா்வுகளாக மாற்ற வேண்டும் என்றாா்.
நிகழ்வில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியா் அந்தோணி ஹாலோக் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். மேலும், விஐடி பதிவாளா் ஜெயபாரதி, சுற்றுச்சூழல் மையப் பேராசிரியா் எஸ். சாந்தகுமாா், சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி எஸ்.வி. சீனிவாசன், சென்னை ஐஐடி பேராசிரியா் குரியன் ஜோசப் உள்ளிட்டோா் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.