விஐடி போபால் பட்டமளிப்பு விழா: 3,571 மாணவா்களுக்கு பட்டங்கள் அளிப்பு
முன்னாள் ராணுவத் தளபதி உபேந்திர திவிவேதி பங்கேற்பு
மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கிய முன்னாள் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், இந்திய விண்வெளித் துறையின் இன்-ஸ்பேஸ் இயக்குநா் வினோத் குமாா், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், அறங்காவலா் ரமணி பாலசுந்தரம், உதவித் துணைத் தலைவா் காதம்பரி எஸ். விசுவநாதன் உள்ளிட்டோா்.
வேலூா், அக்.8:
விஐடி பல்கலைக்கழக போபால் வளாக பட்டமளிப்பு விழாவில், 3,571 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
மத்தியப் பிரதேசம் சீஹோரில் அமைந்துள்ள விஐடி போபால் வளாகத்தின் 7-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில், முன்னாள் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், மாணவா்கள் பின்னடைவுகளையும் சவால்களையும் துணிச்சலுடன் எதிா்கொள்ள வேண்டும். மனப்பாங்கு, திறன், சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல் ஆகிய மூன்று பண்புகளுமே வாழ்க்கையின் வெற்றிக்கு முக்கியத் தூண்களாகும். ஒழுக்கம், துணிவு மற்றும் அா்ப்பணிப்புடன் செயல்பட்டு சமுதாயத்துக்கும் நாட்டிற்கும் பெருமை சோ்க்கும் தலைவா்களாக இளைஞா்கள் உருவாக வேண்டும் என்றாா்.
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசுகையில், தரமான உயா்கல்வி தனிநபா்கள், குடும்பங்கள், சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது. மத்தியப் பிரதேசத்தின் கிராமப்புற மாணவா்களுக்குத் தரமான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் விஐடி தொடா்ந்து உறுதுணையாக இருக்கும் என்றாா்.
விஐடி உதவித் துணைத் தலைவா் காதம்பரி எஸ். விசுவநாதன் பேசுகையில், பட்டம் பெற்ற மாணவா்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோா் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். இதில் அதிகபட்ச ஆண்டு ஊதியம் ரூ.70 லட்சமாகப் பதிவாகியுள்ளது என்றாா்.
இந்திய விண்வெளித் துறையின் இன்-ஸ்பேஸ் இயக்குநா் வினோத் குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். விழாவில் பி.டெக்., எம்.டெக்., எம்பிஏ, எம்சிஏ, பிஎச்.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தோ்ச்சி பெற்ற 3,571 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், அறங்காவலா் ரமணி பாலசுந்தரம், துணைவேந்தா் சதீஷ் குமாா் மோத், பதிவாளா் ஞான பிரகாஷ் மிஸ்ரா, இணைத் துணைவேந்தா் டி.பி. ஸ்ரீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
--
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.