FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசு விதிகளை மீறும் தனியார் பள்ளிகளை மூட சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு

கோவையில் அரசு விதிகளை மீறியும், மாணவர்களை பழிவாங்கும் விதமாகவும் செயல்படும் தனியார் பள்ளிகளை மூட சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

கோவையில் அரசு விதிகளை மீறியும், மாணவர்களை பழிவாங்கும் விதமாகவும் செயல்படும் தனியார் பள்ளிகளை மூட சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

 கோவை, சேரன் மாநகரில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 1-ஆம் வகுப்பு மாணவர் ஜெ.அஜய், தேர்ச்சியடைந்த பின்னரும் 2-ஆம் வகுப்புக்கு அனுமதிக்கப்படவில்லை. மாணவரின் பெற்றோர் ரூ. 40 ஆயிரம் நன்கொடை செலுத்திய நிலையில், அதற்கு ரசீதும், இதரக் கட்டணங்கள் குறித்தும் மாணவரின் பெற்றோர் கேள்வி எழுப்பியதால் மாணவர் அஜய்யை பள்ளியில் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது.

 இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், மாணவரைப் பள்ளியில் அனுமதிக்க அதிகாரிகள் உத்தரவிட்டும் அவரை பள்ளி நிர்வாகம் வகுப்பிற்கு அனுமதிக்கவில்லை.

Advertisement

Advertisement

 இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து கல்வி பாதுகாப்புக் குழு சார்பில் கோவையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு, பெற்றோர் நலச் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வீ.தெய்வேந்திரன் தலைமை வகித்தார். கோவை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ஜே.ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

 இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசியது:

இந்தியாவில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் வந்தபோதே இது போலியானது என்றும், இதனால் கல்வி உரிமையைக் கொண்டு வர முடியாது என்றும் கூறினோம். அதை நிரூபிக்கும் வகையில் கோவை மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. சட்டப் பிரிவு 8, நாட்டில் உள்ள 6 முதல் 14 வயதுள்ள ஒவ்வொரு குழந்தையும் கட்டாயமாக பள்ளியில் சேர்க்கப்படுவதையும், கல்வி முடிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது. இதை உறுதிப்படுத்தும் அதிகாரம் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு உள்ளது. அதேபோல, சட்டப் பிரிவு 51 (ஏ) பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்கிறது. இதன்படி மாணவர் அஜய்யை சீருடை அணிவித்து அழைத்துச் சென்றால் தனியார் பள்ளி நிர்வாகம்  அனுமதிக்க மறுக்கிறது.

 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி எந்த ஒரு பள்ளியும் ஒரு மாணவரைச் சேர்க்க மறுப்பு தெரிவிக்க முடியாது. அவ்வாறு செய்யும் பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடியும் என்று பிரிவு 18 (3) கூறுகிறது. எனவே, இந்த அடிப்படையில் அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம். இதேபோல, கோவையில் பல தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றன. இவற்றைக் கண்டித்து அடுத்த மாதம் பெற்றோர், மாணவர்களைத் திரட்டி சம்பந்தப்பட்ட பள்ளிகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.

 இப்போராட்டத்தில் கல்விப் பாதுகாப்புக் குழு நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments