FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகக் கூறி ஜவுளி நிறுவன ஊழியர்கள் ஆட்சியரிடம் மனு

கோவையைச் சேர்ந்த ஜவுளி விற்பனை நிறுவனத்தில் தாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகக் கூறி பெண்கள் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

கோவையைச் சேர்ந்த ஜவுளி விற்பனை நிறுவனத்தில் தாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகக் கூறி பெண்கள் உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

 இதுகுறித்து, கோவை, டாடாபாத், 100 அடி சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் என்.செல்வராஜ் தலைமையில் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கிடம் அளித்த மனு:

 100 அடி சாலையில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 250 பேர் வேலை செய்து வருகிறோம். எங்களிடம் நாளொன்றுக்கு 12 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை வாங்கப்படுகிறது. உணவு இடைவேளையோ, ஓய்வு நேரமோ வழங்கப்படுவதில்லை.

Advertisement

Advertisement

 தொழிலாளர்களுக்கு அவசர விடுப்பும் வழங்கப்படுவதில்லை. பெண் தொழிலாளர்களிடம் அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் பேசுவது போன்ற பாலியல் தொந்தரவுகளும் நிலவி வருகின்றன. அதுகுறித்து, கேட்ட தொழிலாளர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 ஆகஸ்ட் மாத ஊதியத்தில் ரூ. 3 ஆயிரம் வரை வழங்க வேண்டிய ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏற்கெனவே நடத்தப்பட்ட பேச்சுவார்தை முடிவுகளை அமல்படுத்த மறுக்கும் நிர்வாகம், எங்களைக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது. இதுகுறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டக் கல்லூரி மாணவர்கள் மனு: கோவை மாவட்டம் வழியாக மாடுகள் கடத்தப்படுவதாகவும், அதற்காக லாரிகளில் சட்ட விரோத நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் சட்டக் கல்லூரி மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 விலங்குகள் நல வாரிய அமைப்பில் உறுப்பினர்களாக தாங்கள் இருப்பதாகவும், கோவை வழியாக கேரளத்துக்கு மாடுகள் கடத்தப்படுவதாக 3 முறை மாவட்ட நிர்வாகம், காவல் துறையிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ள அவர்கள், மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளின் நீளம் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக நீட்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றும், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

முதியோர் இல்லம் சார்பில் மனு:

கோவை, சரவணம்பட்டியில் நடைபெற்று வரும் ஓசானாம் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மூதாட்டிகளுடன் வந்த இல்ல நிர்வாகிகள், தங்களுக்குச் சொந்தமான வழித்தடத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அபகரிக்க முயற்சிப்பதாகவும், அதன் மூலமாக இல்லத்தையும் பறிக்க முயற்சிப்பதாகவும் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

வேகத்தடை கோரி மனு:  கோவை மாநகராட்சி, 21-ஆவது வார்டு, சுண்டப்பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள வாழை மண்டிக்கு அதிகளவில் வாகனங்கள் வருவதாகவும், இதனால் விபத்துகள் நேரிடுவதால் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும், ராமலிங்கம் சாலை, ஆர்.எஸ்.புரம், டி.பி. சாலையின் பிரதான பக்கவாட்டு அணுகு சாலையாக இருப்பதால் மக்களின் நலன் கருதி இங்குள்ள சாலைத் தடுப்பை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மின்வாரியத்தில் ஊழல் நடப்பதாக புகார்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பர்கூர் மலை, ஊராட்சிப் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக மின் வாரியத்தினரால் ரூ. 2 கோடி அளவுக்கு பல ஊழல்கள், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக சமூக ஆர்வலர் ஆ.ஜூலியஸ் தலைமையில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களின் மின் வாரியம் தொடர்பான ஊழல்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு கோவை, டாடாபாத்தில் இருப்பதாகவும், இதுதொடர்பாக அங்கு புகார் தெரிவித்துள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments