சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: சுந்தராபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
கோவை சுந்தராபுரத்தில் கார் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து அஞ்சலி செலுத்தவந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை சுந்தராபுரத்தில் கார் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து அஞ்சலி செலுத்தவந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த சுந்தராபுரத்தில் மதுபோதையில் காரை இயக்கியதால் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது அந்த வழியாக வந்த கார் ஆகஸ்ட் 1ஆம் தேதி மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக நீலகிரி மாவட்டம், குன்னூர், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ஜெகதீஷ்குமார் (38) என்பவரை கோவை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வு மேற்குப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல்: இந்நிலையில், குறிச்சி அனைத்து சமூக ஒருங்கிணைப்புக்குழு, அனைத்து சமூகப் பெரியதனக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், விபத்து நடைபெற்ற இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், அனைவரும் திடீரென பொள்ளாச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, விபத்தை ஏற்படுத்திய கார் தனியார் கல்லூரிக்குச் சொந்தமானது. 6 பேர் உயிரிழந்தும், 5 நாள்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை கல்லூரி நிர்வாகம் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கார் ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர்அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் கோவை - பொள்ளாச்சி சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.