வெள்ளலூர் கிடங்கில் குப்பைகளை 100% தரம் பிரிக்கும் திட்டத்தை நிறைவேற்றவில்லை:பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை நூறு சதவீதம் தரம் பிரிக்கும் திட்டத்தை முழுமையாக
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை நூறு சதவீதம் தரம் பிரிக்கும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதன்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள், கடந்த 2003ஆம் ஆண்டு முதல் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இங்கு குப்பைகள் முழுமையான அளவில் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. மேலும் பல டன் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் புகை மூட்டம் ஏற்படுதுடன், குப்பைகளால் கொசு, ஈக்கள் அதிகரித்து நோய் பரவுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் இடையூறாக இருக்கும் கிடங்கை மூட வலியுறுத்தியும், கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்ற உத்தரவிடக் கோரியும் மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், சென்னை மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, நீரின் மாதிரிகளையும் அவர் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி வெள்ளலூர் குப்பைக் கிடங்கு சுற்றுப் பகுதிகளில் உள்ள 16 இடங்களில் நிலத்தடி நீரின் மாதிரியை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் நீர் மாசடைந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை கையாள தேவையான திட்டம் எப்போது செயல்படுத்துப்படும் என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
கோவை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.116.21 கோடி நிதி ஒதுக்கப்படும்.
இதில் ரூ.89 கோடி மதிப்பில் குப்பைக் கிடங்கில் 9 லட்சத்து 40 ஆயிரத்து, 468 கியூபிக் மீட்டரில் உள்ள பழைய குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இப் பணி 2018-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி ஜூன் மாதத்தில் முடிவடையும். 600 டன் குப்பைகளை கொண்டு உரம் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள புதிய ஆலை அமைக்க ரூ.11.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நூறு சதவீத அளவுக்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதில்லை. நாளொன்றுக்கு 600 டன் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்க 15 ஏக்கர் பரப்பளவில் ஆலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் முடிவடையவில்லை.
மேலும் அறிவித்தபடி பழைய குப்பைகளை பயோ மைனிங் என்ற விஞ்ஞான முறைப்படி அகற்றும் பணியையும் நிறைவேற்றவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.