முகப்பு
கோயம்புத்தூர்

மாநில அரசுகளின் ஒப்புதலோடு பெட்ரோல் - டீசல் விலைகள் ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வரப்படும்

பெட்ரோல், டீசல் விலையை ஜி எஸ்.டி கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம். மாநில அரசுகளின் ஒப்புதலோடு பெட்ரோல்- டீசல் விலைகள் ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வரப்படும் என பாஜக முன்னாள் எம்.பி ச

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலையை ஜி எஸ்.டி கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம். மாநில அரசுகளின் ஒப்புதலோடு பெட்ரோல்- டீசல் விலைகள் ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வரப்படும் என பாஜக முன்னாள் எம்.பி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை சித்தாபுதூரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் பிரதமர் மோடியின் ஓர் ஆண்டு கால சாதனை குறித்த செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது : பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஒர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மோடி தமிழ் பண்பாட்டின் மீது மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார். 

ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரியை தமிழகத்திற்கு தந்தவர் பிரதமர் மோடி. மதுரையில் எய்ம்ஸ் என்பது கனவு எனக்கூறிய நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது. 

 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.180 ஆக இருந்த கூலி ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. ஏழை,எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் மோடி. கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க பல கோடி மதிப்பில் குடிநீர் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

காவிரி நீர் விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறந்துள்ளது. நடுவர் மன்றம் அமைக்க மோடி தீவிர முயற்சி மேற்கொண்டார்.

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் திட்டத்தில் நாடு முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். நடைபாதை வியாபாரிகள், விவசாயிகள், வீட்டு வேலை பார்பவர்கள் என பலருக்கும் நலவாரியம் மூலம் ரூ.3 ஆயிரம் ஒய்வூதிய திட்டம் வழங்கியவர் மோடி.

கரோனா சிறப்பு நிதியாக சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜூன் முதல் வாரத்தில் மட்டும் ரூ.145 கோடி சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கப்பட்டுள்ளது. 

சிறுவாணி ஆணையில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீர் கேரள அரசால் தடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கம்யூனிஸ்ட்கள் அதை தட்டி கேட்காமல் உள்ளனர். 

தமிழக மக்கள் இதனை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். உலக ஒற்றுமை குறித்து பேசும் கம்யூனிஸ்ட்களிடம் ஒற்றுமையில்லை. 

மோடி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட்ட போதும் தமிழக நலனில் அக்கறை காட்டுகிறார். சீனா ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போது பிரதமர் மோடி எதிர்த்து நின்றதால் சீனாவே பின்வாங்கியது.

ஒர் ஆண்டு காலம் பிரதமர் மோடி மக்கள் நலனில் அக்கறை கொண்டு பொருளாதார ரீதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஒர் ஆண்டுகளாக விலை ஏற்றமே இல்லை.

விரைவில் கோதவரி - காவிரி நதிகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம். 

மாநில அரசுகளின் ஒப்புதலோடு பெட்ரோல்- டீசல் விலைகள் ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வரப்படும். 

கேரளாவோடு மோதல் போக்கை மேற்கொள்ளாமல் பேசி தீர்க்க வேண்டும் என மாநில அரசு எண்ணுகிறது. மின்சாரம் இழப்பு என்பது மின்சாரம் திருட்டு மூலம் நடக்கிறது. இலவச மின்சாரம் திட்டம் ஒரு போதும் ரத்து செய்யப்படாது. 

கரோனா இறப்பு விவகாரத்தில் புள்ளி விவரங்களில் சிறு பிழை இருந்துள்ளது. அதனை தமிழக அரசே ஒப்புக்கொண்டு அதனை சரிசெய்துள்ளது.

ஜமாத்தில் பங்குபெற்றதன் காரணமாகதான் கரோனா தமிழகத்தில் பரவியது என சொல்லாமல் எதிர்கட்சிகள் தயங்கியது ஏன்?. எதிர்கட்சிகள் அரசு எடுக்கின்ற நல்முயற்சிகளை எதிர்க்கக்கூடாது, ஆளும் அரசின் தவறுகளை சுட்டி காட்டி நல்முயற்சிகளை வரவேற்க வேண்டும்.

வழிப்பாட்டு தலங்கள் திறப்பு விவகாரங்களில் தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது கரோனா பரவல் சென்னையில் இருப்பதால் வழிப்பாட்டு தலங்களை திறக்க வேண்டாம் என தமிழக அரசு எண்ணுகிறது. அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன், அகில இந்திய இளைஞர் அணி துணைத்தலைவர் ஏ.பி முருகானந்தம், மாவட்ட தலைவர் ஆர் நந்தகுமார், செய்தி தொடர்பாளர் சபரி, மாநில நிர்வாகி கனகசபாபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →