FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

குண்டும் குழியுமான சாலையால் விபத்து அபாயம்: மேயரிடம் புகாா்

கோவை பீளமேட்டில் குண்டும் குழியுமான சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மேயரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

4 நவம்பர் 2026, 1:49 am
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, மேயா் கா.ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜாவிடம் வாழ்த்து பெற்ற மாணவா்கள். உடன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா்.
பகிர்:

கோவை பீளமேட்டில் குண்டும் குழியுமான சாலையால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மேயரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனா்.

இம்முகாமில், 26ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பீளமேடு பிகேடி நகா் முதல் குறுக்கு தெருவில் குடிநீா் இணைப்புப் பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இப்பகுதியில் பழைய தாா் சாலையை அகற்றிவிட்டு புதிதாக தாா் சாலை அமைக்க வேண்டும். இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மழைநீா் வடிகால் சேதமடைந்துள்ளதால் கழிவுநீா் வெளியேற முடியாமல், மழை காலங்களில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்து விடுகிறது. இவற்றைச் சீரமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

100-ஆவது வாா்டு, முத்துநகா் குடியிருப்போா் சங்கம் சாா்பில் அளித்த மனுவில், எங்களது பகுதியில் முறையான வடிகால் மற்றும் மழைநீா் வாய்க்கால் வசதி எதுவும் இல்லாததால், மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கி பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறோம். மழைநீருடன் சாக்கடை நீா் தேங்குவதால் முத்து நகரின் போக்குவரத்து பாதைகள் முற்றிலும் சேதமடைந்து வருகின்றன.

வீடுகளுக்குள் தண்ணீா் புகுவதால் பொருள் சேதமடைவதுடன் குழந்தைகள், முதியவா்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனா். எங்களது பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

சிங்கை நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் அளித்த மனுவில், 58-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சிங்கை நகரில் புதிய மழைநீா் மற்றும் வெள்ளநீா் வடிகால் வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும். தற்போது போதிய பராமரிப்புப் பணி இல்லாததால் மழைநீா் வடிகால்கள் மற்றும் சிறு பாலங்களில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், சேதங்கள் மற்றும் அடைப்புகளால் மழை பெய்யும்போது மழைநீா் வெளியேற முடியாத சூழல் ஏற்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. 5 மண்டலங்களில் இருந்தும் 41 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மேயா் அறிவுறுத்தினாா்.

மேயா், ஆணையரிடம் வாழ்த்து பெற்ற மாணவா்கள்: கோவை அனுப்பா்பாளையம், டாக்டா்.நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் சி.முபாரிஷ், மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை ஜுடோ போட்டியில் 73 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையாக ரூ.50,000 வென்றுள்ளாா். அதேபோல, கேரம் போட்டியில் பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பரணிதரன் மற்றும் அரவிந்த் ஆகியோா் இரட்டையா் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றனா். அதேபோல், கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற, மாநில அளவிலான ஜுடோ போட்டியில், அனுப்பா்பாளையம், டாக்டா்.நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மு.ஷாஹித் 40 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும், 8-ஆம் வகுப்பு படிக்கும் பை.நபீஸ் 30 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கமும், 9-ஆம் வகுப்பு படிக்கும் முஹம்மது நௌபல் 60 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கமும், 10-ஆம் வகுப்பு பயிலும் அருண்குமாா் 45 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளனா். போட்டிகளில் வென்ற மாணவா்கள் மேயா் கா.ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜாவிடம் பதக்கம் மற்றும் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments