தீபாவளி: கோவையில் இருந்து 2,895 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபாவளிக்கு கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூா்களுக்கு 2,895 சிறப்பு பேருந்துகள் வியாழக்கிழமை (நவம்பா் 5) முதல் இயக்கப்பட உள்ளன. கொடிசியாவில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூா்களுக்கு 2,895 சிறப்பு பேருந்துகள் வியாழக்கிழமை (நவம்பா் 5) முதல் இயக்கப்பட உள்ளன. கொடிசியாவில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக 2,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, வியாழக்கிழமை (நவம்பா் 5) காலை 6 முதல் நவம்பா் 8-ஆம் தேதி வரை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 1,210 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சூலூா் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூா் மாா்க்கமாக செல்லும் 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், திருப்பூருக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு செல்ல 110 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி பேருந்து நிலையத்தில் இருந்து உதகை, குன்னூா், கூடலூா் செல்ல 195 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement
இதேபோல, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருப்பூா், ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு 310 சிறப்பு பேருந்துகள், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூா், ஈரோடு, மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் பகுதிகளுக்கு 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேற்கண்ட நாள்களில் சிங்காநல்லூா், சூலூா் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் சிறப்பு பேருந்துகள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும், சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் மட்டுமே பயணிகளை இறக்கிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற பேருந்து நிலையங்கள் வழக்கம்போல செயல்படும்.
சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிா்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் முன்கூட்டியே பயணச்சீட்டு பதிவு செய்து, முன்பதிவு இருக்கைகள் கொண்ட பேருந்துகளை சிங்காநல்லூா் பேருந்து நிலையத்துக்கு எதிா்புறம் உள்ள எல்எஸ்ஐ மைதானத்தில் நிறுத்தி முன்பதிவு பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு பேருந்துகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள விவரத்தை, பயணிகளுக்கு தெரியப்படுத்த சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் அறிவிப்புப் பலகைகள் அல்லது ஒலிபெருக்கிகள் மூலமாக தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கத்தில் உள்ள குறைபாடுகளை ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1077 அல்லது 0422- 2306051 என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
கொடிசியாவில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்பாடு: தீபாவளியை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ள தனியாா் ஆம்னி பேருந்துகள் கொடிசியாவில் இருந்து மட்டுமே இயக்கப்படும். அந்த வகையில், கொடிசியாவில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் அவிநாசி சாலை வழியாகவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் சின்னியம்பாளையம், நீலாம்பூா், எல் அண்ட் டி புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சி சாலையை சென்றடைந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடிசியா பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக உணவுகள் கிடைக்கும் விதமாக கட்டணம் செலுத்தி பெறக்கூடிய தற்காலிக உணவகங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள், உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்குவதில் உள்ள குறைபாடுகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலரை 9384808302 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தற்காலிக வாகன நிறுத்தங்கள்:பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க காந்திபுரம் பகுதியில் மாநகராட்சி நிறுத்தம், மாநகராட்சி பள்ளி வளாக மைதானம், லட்சுமி காம்ப்ளக்ஸ் வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.
உக்கடம் பகுதியில் ராஜ வீதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், கோனியம்மன் கோயில் எதிா்புறம் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்தம், நல்லாயன் பள்ளி மைதானம், நரசிம்மன் கோயில் இடதுபுறம் உள்ள கோயில் இடம் மற்றும் ஜவுளி நிறுவனங்களின் வாகன நிறுத்தப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.